Categories
உலகம்

ஹிந்து திருமண சட்டம்: பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவை ஒப்புதல்

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் திருமணம் தொடர்பான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையில் வெள்ளிக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஹிந்துக்களின் திருமணம், திருமணப் பதிவு, மண முறிவு, மறுமணம், வயது வரம்பு ஆகியவற்றைக் குறித்த மசோதா ஏற்கெனவே அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. மேலவையில் சட்டத் துறை அமைச்சர் ஜாஹீத் ஹமீத் தாக்கல் செய்த மசோதா தொடர்பாக விவாதம் முடிந்ததும் வாக்கெடுப்பின்போது, எந்தக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினரும் ஆட்சேபிக்கவோ எதிர்க்கவோ இல்லை. அதைத் தொடர்ந்து மேலவை அதற்கான ஒப்புதலை ஒருமனதாக அளித்துள்ளது. பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்களுக்காக இது போன்ற சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, இஸ்லாமிய கொள்கைகளுக்கும் எதிரானது என்று ஓர் உறுப்பினர் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக, அதிபரின் கையெழுத்தைப் பெற்றதும் மசோதா சட்டமாக நடைமுறைக்கு வரும். ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த ஹிந்து எம்.பி.யான ரமேஷ்குமார் வாங்வானி கடந்த மூன்று ஆண்டுகளாக ஹிந்து திருமண சட்டத்தை நிறைவேற்றப் போராடி வருகிறார். ஹிந்து பெண்களின் கட்டாய மதமாற்றத்தை தடுக்க இந்த சட்டம் உதவும் என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த சட்டத்தின் மூலம் சிறுபான்மை ஹிந்துப் பெண்கள் தங்கள் திருமணம் தொடர்பாக முறையான சான்றிதழ் பெற இயலும். அதன் மூலம் அவர்களின் கட்டாய மதமாற்றம் தடுக்கப்படும் என்றார் அவர். முன்னதாக, இந்த மசோதா குறித்து நாடாளுமன்ற மேலவையின் பல்வேறு நிலைக்குழுக்களிலும் ஏகமனதாக அது ஏற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நிலைக்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் மட்டும், நாட்டின் அரசியல் சாசன சட்டத்தின் கீழேயே அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளைப் பெறலாம் என்று தெரிவித்திருந்தார். இந்த சட்டம், பஞ்சாப், பலூசிஸ்தான், கைபர் பக்துன்குவா மாகாணங்களில் மட்டும் நடைமுறையில் இருக்கும். சிந்து மாகாணத்தில் ஏற்கெனவே ஹிந்து திருமண சட்டம் நடைமுறையில் உள்ளது. முதல் முதலாக, ஹிந்து திருமணச் சட்டம்-2014 என்கிற தனி நபர் மசோதாவை, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் லால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ராணா பகவான் தாஸ் உள்ளிட்ட பல சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து தனது மசோதாவை உருவாக்கியதாக அவர் கூறினார். அவர் தாக்கல் செய்த வரைவு மசோதா நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பாகிஸ்தானின் மக்கள் தொகையில் சுமார் 1.6 சதவீதம் பேர் ஹிந்துக்கள். 1947-இல் அந்த நாடு உருவாக்கப்பட்டது முதல், சிறுபான்மையினரான இவர்களது திருமணங்கள் தொடர்பாக, அந்த நாட்டில் சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை. இதனால் அந்த நாட்டில் ஹிந்துக்கள் தங்களின் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் பெறுவதோ, அவற்றைப் பதிவு செய்வதோ இயலாத நிலை உள்ளது என்று “தி டான்’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Leave a Reply