Categories: உலகம்

“பிரெக்ஸிட்’ குறித்து நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்: பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்த முடிவு தொடர்பாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியூபர்கர் தீர்ப்பில் தெரிவித்ததாவது: ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் முடிவை அரசு தன்னிச்சையாக எடுக்க முடியாது. அது தொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பு இறுதியானது அல்ல. நாடாளுமன்றத் தீர்மானம் மூலம்தான் வெளியேறும் முடிவுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் பெற இயலும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து அதனை சட்டமாக இயற்ற வேண்டும். அதன் அடிப்படையிலேயே ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நடவடிக்கையைத் தொடங்க இயலும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என 8 நீதிபதிகளும், பொது வாக்கெடுப்பு முடிவே போதுமானது – நாடாளுமன்ற ஒப்புதல் பெறத் தேவையில்லை என்று 3 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில், பிரிட்டன் முடியாட்சியின் கீழ் உள்ள ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளும் தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. எனினும் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து நாடாளுமன்றங்கள் தனியாக இது தொடர்பாக ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை எனவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முடிவுகளை அவை ஏற்க வேண்டும் எனவும் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று அட்டர்னி ஜெனரல் ஜெரிமி ரைட் கூறினார். ஆனால் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தீர்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கான ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளோம் என்றார். முன்னதாக, பொது வாக்கெடுப்பு நடத்தி பிரெக்ஸிட் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என்றும் நாடாளுமன்றத் தீர்மானம் மூலம்தான் அதனை மேற்கொள்ள முடியும் என்றும் பொது நல வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரருக்கு சாதகமாக அங்கு தீர்ப்பு வெளியானது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிரிட்டன் அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதன் மீதான தீர்ப்பே தற்போது வெளியாகியுள்ளது. வாதங்களின் முடிவில் உச்ச நீதிமன்றத் தலைவர் நியூபர்கர் குறிப்பிட்டதாவது: “பொது வாக்கெடுப்பு முடிவை நிராகரிக்கும் உத்தேசம் நீதிமன்றத்துக்கு இல்லை. வாக்கெடுப்பில் கிடைத்த முடிவை எவ்வாறு அரசு நடைமுறைப்படுத்த முடியும்? நாடாளுமன்றத்தின் பங்களிப்பு என்ன என்பது போன்ற கேள்விகள் நீதிமன்றத்தின் முன் உள்ளன’ என்று அவர் குறிப்பிட்டார். பின்னணி: ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறுவதை பல ஆளும் கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வந்த நிலையில் அன்றைய பிரதமர் டேவிட் கேமரூன், அத தொடர்பாகப் பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார். பிரெக்ஸிட் குறித்த பொது வாக்கெடுப்பு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. எதிர்பாராத விதமாக, ஐரோப்பிய யூனியன் அமைப்பைவிட்டு பிரிட்டன் விலக வேண்டும் என்ற கருத்துக்கு கூடுதல் ஆதரவு கிடைத்தது. இந்த அதிர்ச்சி முடிவைத் தொடர்ந்து டேவிட் கேமரூன் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அதையடுத்து தெரசா மே பிரதமரானார். பிரெக்ஸிட் தொடர்பான நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்த ஆலோசனைகளை அவர் மேற்கொண்டார். இதனிடையே, பொது வாக்கெடுப்பு முடிவைக் கொண்டு மட்டும் பிரெக்ஸிட் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், நாடாளுமன்றத்தின் முறையான அனுமதியைப் பெற வேண்டும் என்றும் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஜீனா மில்லர் என்ற பெண் தொழிலதிபர் தொடுத்திருந்தார். இது அரசியல் வழக்கு அல்ல என்றும், நாடாளுமன்ற முறையை உலகுக்கு அளித்த பிரிட்டனில், சட்ட ரீதியான நடைமுறையைக் கடைப்பிடிப்பதுதான் சரியான வழிமுறை என்று தெளிவுபடுத்தவே வழக்கு தொடுத்தேன் என்றும் அவர் கூறினார். அந்த வழக்கை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுமாறு அரசுக்கு உத்தரவிட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை அரசு தாக்கல் செய்தது. இதனிடையே, பிரெக்ஸிட் தீர்ப்பினால் அரசுக்குப் பின்னடைவு இல்லை என்று பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். “பிரெக்ஸிட் மசோதா விரைவில் தாக்கல்’ பிரெக்ஸிட் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும், பிரெக்ஸிட் விவகார அமைச்சர் டேவிட் டேவிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாவது: மேல்முறையீட்டில் அரசுக்கு எதிரான தீர்ப்பு வந்தால், அதற்கு ஏற்ப அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே ஆலோசனை நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் முடிவை செயல்படுத்தும் விதத்தில், “பிரெக்ஸிட்’ குறித்த மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர். பொது வாக்கெடுப்பு முடிவை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்று தெரசா மே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். “பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பில் மக்கள் எடுத்த முடிவை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது. மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்ற முடிவை எடுத்ததே நாடாளுமன்றம்தான். அதன்படியே மக்களின் முடிவையும் நாடாளுமன்றம் ஏற்க வேண்டும்’ என்று அவர் கூறி வருகிறார்.

Related Post
Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

11 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago