Categories
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஊடுருவல் 35 ரஷ்ய அதிகாரிகள் வெளியேற உத்தரவு: ஒபாமா அதிரடி நடவடிக்கை

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் இணையதளம் மூலம் ஊடுருவிய 35 ரஷ்ய அதிகாரிகளை அமெரிக்காவைவிட்டு உடனடியாக வெளியேறும்படி ஒபாமா உத்தரவிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8ம் தேதி நடந்தது. இதில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் டிரம்ப் வெற்றி பெறவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியை தோற்கடிக்கவும் ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின் பேரில் இணையதள ஊடுருவல் கும்பல் செயல்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனநாயககட்சி தலைவர்கள் மற்றும் கட்சியின் இணைதளங்களில் அவர்கள் ஊடுருவி இமெயில் தகவல்களையும் வெளியிட்டதை அமெரிக்க உளவுப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து ரஷ்யா மீது தொடர் தடை விதிக்கும் நடவடிக்கைகளை பதவி விலகப்போகும் அதிபர் ஒபாமா மேற்கொண்டார். முதற்கட்டமாக, அமெரிக்காவில் பணியாற்றும் 35 ரஷ்ய அதிகாரிகளை உடனடியாக அமெரிக்காவைவிட்டு வெளியேறும்படி அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மேரிலேண்ட், நியுயார்க்கில் உள்ள இரண்டு ரஷ்ய நிறுவனங்களை இழுத்து மூடவும் அவர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அனைத்து அமெரிக்கர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலும், பொதுப்படையாகவும் தற்போது நாம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை ரஷ்ய அரசுக்கு ஒரு பகிரங்க எச்சரிக்கையாகும். சர்வதேச விதிமுறைகளை மீறி அமெரிக்க நடைமுறைகளில் தலையிட்டதற்காக நாம் தேவையான நடவடிக்கை மற்றும் பதிலடியை கொடுத்துள்ளோம். 9 நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 ரஷ்ய உளவுப்பிரிவு அதிகாரிகள், 4 ரஷ்ய தூதரக அதிகாரிகள், சைபர் தாக்குதலுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த 3 நிறுவனங்கள் இதில் முக்கியமானவை. மேலும் இதற்கான நிதி திரட்டி கொடுத்த 2 ரஷ்ய ஊழியர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்தம் 35 பேரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளோம். 72 மணி நேர கெடு அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகமும், எப்பிஐ அதிகாரிகளும் உரிய விளக்கங்களை அளிப்பார்கள். ரஷ்ய நிறுவனங்களும், அதன் ராணுவமும், உளவுப்பிரிவும் எப்படி அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பதைப் பற்றி தெரிவிப்பார்கள். இதோடு நடவடிக்கை முடியவில்லை. எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்வோம். சில விஷயங்களை வெளிப்படையாக அறிவிக்க முடியாது. ரஷ்யா தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. எனவே உலகம் முழுவதும் வாழும் அமெரிக்கர்கள், அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யாவின் சர்வதேச விதிமுறை மீறல் நடத்தையை உணர்ந்து எச்சரிக்கை உணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.அறிவியல் போர் நடத்திய ரஷ்யாஅமெரிக்க அதிபர் தேர்தலை குலைக்க ரஷ்யா எப்படியெல்லாம் செயல்பட்டது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ரஷ்ய அதிபர் புதினின் நேரடி வழிகாட்டுதல் பேரில் ராணுவ உயர் அதிகாரிகள் சைபர் தாக்குதலுக்கு தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதை அறிவியல் போர் என்றே குறிப்பிட்டுள்ளனர். இணையதள பணியில் சிறந்து விளங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தொடங்கி சிறை கைதிகள் வரை அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மறுத்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இதற்காக பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மிரட்டலுக்கு பயந்து அலெக்சாண்டர் வயாரா என்பவர் பின்லாந்துக்கு தப்பிச்சென்றுள்ளார். ஜனநாயக கட்சியின் தேசியக் கமிட்டி கம்ப்யூட்டரை ஊடுருவும் பணி 2013ல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னணி இணையதளங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு ராணுவத்தின் தனிப்பிரிவு ஏற்படுத்தி பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் பணியை கச்சிதமாக முடித்து ஹிலாரியை தோல்வி அடையச் செய்துள்ளனர்.புதின் மறுப்புரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் கூறுகையில், “ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் 31 ஊழியர்கள், 4 தூதரக அதிகாரிகளை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடும் ஆவணம் அதிபர் புதினின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். ஆனால் அமெரிக்கா செய்தது போல் தூதர்களை ரஷ்யா வெளியேற்றாது என்று அதிபர் புதின் தெரிவித்தார்.

Leave a Reply