Categories
Featured தமிழகம்

செங்கல்பட்டு அருகே வீடு இடிந்து விழுந்து சிறுமி பலி: 4 பேர் படுகாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே வீடு இடிந்துவிழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.செங்கல்பட்டு அடுத்த ரெட்டிபாளையம், நேரு தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் கூலித் தொழிலாளி. இவரது மனைவி அபிதா. இவர்களுக்கு 8ம் வகுப்பு படிக்கும் சரவணன் (13), 6ம் வகுப்பு படிக்கும் பிரவீன் (10) என்ற 2 மகன்களும், 3ம் வகுப்பு படிக்கும் பிரவீணா (7) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படித்து வந்தனர்.தட்சிணாமூர்த்தியின் குழந்தைகள் 3 பேரும் கோடை விடுமுறை முடிந்து, நேற்று முதன்முதலாக பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்.
மாலையில், தங்களுக்கு அரசு வழங்கிய இலவச பாடப் புத்தகங்களை தங்களது பெற்றோரிடம் காட்டி மகிழ்ந்தனர். பின்னர் அனைவரும் நேற்றிரவு வழக்கம்போல் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் அவர்கள் வீட்டு கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து, வீட்டுக்குள் கட்டிட இடிபாடுகள் வேகமாக விழுந்தது. மேற்கூரை இடிந்து விழும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய பிரவீணாவை மீட்க முயற்சித்தனர். ஆனால் பிரவீணா பரிதாபமாக உடல் நசுங்கி பரிதாபமாக பலியானாள். பிரவீண், சரவணன், தட்சிணாமூர்த்தி, அபிதா ஆகிய 4 பேருக்கும் கை, கால் எலும்புகள் உடைந்து வலியில் துடித்து கொண்டிருந்தனர்.படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘இக்கட்டிடம் மிக பழமையானது. இதை இடித்து அகற்ற வேண்டும் என பலமுறை வலியுறுத்தினோம். தற்போது இக்கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் குழந்தை பலியாகியுள்ளது. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, குழந்தையை இழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரவீணாவின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Leave a Reply