Categories
தமிழகம்

ஜெயலலிதா கைநாட்டும் சசிகலா பதவியும்…! – ஆணையத்தை நெருக்கும் பன்னீர்செல்வம் தரப்பு #VikatanExclusive

தேர்தல் ஆணையத்தை எதிர்கொள்வது குறித்துத்தான் சசிகலா உறவினர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ‘ அ.தி.மு.கவின் சட்டவிதிகளுக்கு மாறாக, பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்தார் சசிகலா. ஜெயலலிதாகு இருந்தபோது அ.தி.மு.க என்ன நிலையில் இருந்ததோ, அப்போது இருந்த கட்சியின் நிலையைத்தான் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கணக்கில் எடுத்துள்ளனர். இது சசிகலாவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, அ.தி.மு.க நிர்வாகிகளால் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் தலைமைக் கழகத்தில் இருந்து கடிதம் அனுப்பியிருந்தனர்.
அந்தக் கடிதத்தில், ‘பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அவரது நியமனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். “எம்.ஜி.ஆர் வகுத்திருந்த கட்சியின் விதிகளுக்கு மாறாக, சில நிர்வாகிகளால் முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. இதை எதிர்த்து தொடக்கத்தில் இருந்தே குரல் கொடுத்து வருகிறார் சசிகலா புஷ்பா எம்.பி. தற்போது பன்னீர்செல்வம் அணியினரும் சசிகலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்குச் சென்றுள்ளனர்.

இன்று மதியம் ஆணைய அதிகாரிகளை சந்தித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன். இந்த சந்திப்பில் சசிகலா தொடர்பான சில விஷயங்கள் பேசப்பட்டுள்ளன” என விவரித்த பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இதில் வேட்பு மனுத்தாக்கலின்போது அளிக்கப்படும் பி ஃபார்மில் பொதுச் செயலாளர் என்ற இடத்தில் ஜெயலலிதாவின் கைநாட்டு இடம்பெற்றிருந்தது. இதைப் பற்றி அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோதும், ‘அவரால் கையெழுத்து போட இயலவில்லை’ என்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

அந்தநேரத்தில் ஜெயலலிதாவின் கைநாட்டுக்கு ஆணையத்தின் அனுமதியைப் பெற்றுத் தந்தவர்களைத்தான், தற்போது கார்டனில் உள்ளவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் மூலம் சசிகலாவை பொதுச் செயலாளர் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்ள வைக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளனர். இதை அறிந்து குடியரசுத் தலைவர் உள்பட அனைத்து தரப்பினரையும் பன்னீர்செல்வம் அணியினர் சந்திக்கச் செல்கின்றனர். ‘கார்டனில் உள்ளவர்களை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஜெயலலிதாவை வைத்துக் கொண்டே அனைத்து ஏமாற்று வேலைகளையும் செய்தவர்கள்தான் இவர்கள்.

அவரது உயிருக்கு என்ன ஆனது என்ற தகவலை ஒட்டுமொத்தமாக மறைத்துவிட்டனர். முன்னாள் முதல்வரின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும். அவர்களை ஊக்குவித்தால் தமிழக மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்’ என்பதை மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பின்போது வலியுறுத்துகின்றனர். கடந்த பிப்ரவரி 3-ம் தேதி சசிகலாவுக்குக் கடிதம் எழுதிய தேர்தல் ஆணையம், ‘பொதுச் செயலாளராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்புங்கள்’ எனத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் விவாதித்து வருகிறார் தினகரன்.

விவகாரம் வேறு திசையில் செல்வதால், டெல்லி லாபி மூலம் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வேலையிலும் தினகரன் தரப்பில் களமிறங்கியுள்ளனர். இவ்வளவு அவசரம் காட்டக் காரணமே, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது அ.தி.மு.க சார்பில் களமிறங்கும் வேட்பாளருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் பி ஃபார்ம் வழங்கப்பட வேண்டும். சசிகலா அளிக்கும் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறி. அந்த விண்ணப்பத்தை நிராகரிக்கும் வேலைகளில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் களமிறங்கும் வாய்ப்புகளும் அதிகம். சுப்ரமணியன் சுவாமி மூலமாகவே அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆலோசித்து வருகின்றனர்” என்றார் விரிவாக.

“அ.தி.மு.கவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டு, வரும் மார்ச் மாதம் 21-ம் தேதியுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. ‘ தற்போது வரையில் சட்டவிரோதமாக பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்கிறார். அவர் கட்சியில் சேர்க்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆனாலும், கட்சி விதிகளின்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் தேர்தல் நடத்த வேண்டும்’ என்பதுதான் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் கோரிக்கை. ‘ கட்சி விதிகளின்படி அவைத் தலைவர்தான் தேர்தலை நடத்த வேண்டும். சட்டவிரோதமாக கட்சிப் பதவியில் அமர்ந்து கொண்டு, நிர்வாகிகளை நீக்கும் வேலைகளில் இறங்கினார். கட்சியை விட்டு நீக்குவதற்கு அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. எனவே, அவைத் தலைவர் மதுசூதனனும் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆணையம் உத்தரவிட வேண்டும்’ என வலியுறுத்தி வருகின்றனர்.

கார்டனில் உட்கார்ந்து கொண்டு அரசு இயந்திரத்தை வழிநடத்துகின்றவர்களால் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு எந்த லாபமும் இல்லை என்பதையும் பா.ஜ.க நிர்வாகிகள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். வரப் போகும் நாட்களை சசிகலா உறவினர்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டியது வரும்” என்றார் விரிவாக.

‘ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி லாபி வெல்லுமா? நடராசனின் மூவ் பலனிக்குமா?’ என்ற பட்டிமன்றமே அ.தி.மு.க நிர்வாகிகள் மட்டத்தில் நடந்து வருகிறது.

– ஆ.விஜயானந்த்

Leave a Reply