Categories
தமிழகம்

வயல் வெளியில் கூட நாங்கள் போராடக் கூடாதா? எச்சரித்த போலீஸ்… கொந்தளித்த விவசாயிகள் !

திருச்சி : கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் வயல்வெளியில் இறங்கி போராட்டம் நடத்த முற்பட்ட விவசாயிகளை போலீஸார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் திருச்சி விவசாயிகள், கால்நடைகளுடன் வயல்வெளியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கத்தை அடுத்த போசம்பட்டி ஊராட்சி, சின்னகுளம் பகுதியில் உள்ள வயல்வெளியில், தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியின் மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஆடு, மாடுகள் மற்றும் கால்நடைகளுடன் கூடினர்.
மாடுகளின் கொம்பில் கறுப்புக்கொடி கட்டிப் போராட்டம் நடத்த முயன்றனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், “ஆடு, மாடுகளை போராட்டத்துக்கு கொண்டு வரக்கூடாது என்றும், வறட்சியால் பாதிக்கப்பட்ட வயல்வெளியில் இறங்கிப் போராடக் கூடாது என்றும் தெரிவித்தனர். மீறினால் கைது செய்வோம் என்றும் எச்சரித்தனர்.

இதனால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள், “எங்கள் வயலுக்குள் நாங்கள் ஆடுமாடுகளுடன் போகக்கூடாதா?. எங்கள் வயலில் நாங்கள் போராடுவதை நீங்கள் கேட்க முடியாது” எனச்சொல்லி வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, போலீஸ் தடையை மீறி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், “தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கடந்தாண்டு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வறட்சியைக் கருத்தில் கொண்டு கால்நடைகளுக்கு இலவசமாக தீவனம் வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய புலியூர் நாகராஜன், “வறட்சியால் பயிர்கள் காய்ந்து கருகுவதைக் கண்டு இதுவரை 74 விவசாயிகள் பலியாகி உள்ளனர். இந்த பலிகளை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். பலியான மற்றும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு 30 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். மழையில்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் மரணத்தை மறைக்க நினைக்கும் போலீஸார், விவசாயிகள் போராட்டம் செய்யவே கூடாது என நினைக்கிறார்கள். எங்கள் நிலத்தில் நாங்கள் போராடுவது எப்படி தவறு. விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு கொடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்,” என புலியூர் நாகராஜன் எச்சரித்தார்.

– சி.ய.ஆனந்தகுமார்,

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Leave a Reply