Categories
Featured தமிழகம்

பிரபல கல்லூரியில் பாலியல் சர்ச்சை! -மாணவிகளின் பகீர் வாக்குமூலம்! Exclusive

நிர்மலாதேவி டூ ஆளுநர் மாளிகை. பொள்ளாச்சி மாணவிகள் கொடூரம். சிறுமி பாலியல் படுகொலை என பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தையே அதிரவைத்துக்கொண்டிருக்கும் சூழலில். பிரபல கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல். புகார்கொடுத்த மாணவிகளுக்கு கொலைமிரட்டல் விடுப்பதாகவும் பகீர் புகார் கிளம்பியிருக்கிறது.

என்ன நடந்தது? என்று நாம் விசாரித்தபோது, ‘இன்றுநேற்றல்ல. கடந்த 20 வருடங்களாக அந்த பேராசிரியர் அப்படித்தான்’ என்று அதிர்ச்சியூட்டும் சென்னை தாம்பரத்திலுள்ள எம்.சி.சி. எனப்படும் மெட்ராஸ் கிறிஸ்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள் நம்மிடம், ’29 கேர்ள்ஸ், 17 பாய்ஸ்ன்னு ஜுவாலஜி டிபார்ட்மெண்ட் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 46 பேர் 2019 ஜனவரி 9-ந்தேதியிலிருந்து 13-ந்தேதிவரைன்னு மூணு நாட்கள் டூர் போனோம்.

பேராசிரியர்கள் ரவின், சாமுவேல் டென்னிசன், ஆலன்ஸ் ஜே ரெட்டி, பெண் பேராசிரியர்களான அனுலின் கிறிஸ்துதாஸ், தினமாலா, அட்டெண்டர் துல்கானம்னு 6 பேர் எங்கக்கூட வந்திருந்தாங்க. ஆனா, எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய பேராசிரியர்களே எங்களிடம் தப்பு தப்பா நடந்துக்கிட்டதுதான் ரொம்ப வேதனையா இருக்குங்கண்ணா’ என்று சொல்லும்போதே மாணவிகளின் பேச்சில் மிகுந்த வேதனை வெளிப்பட ஆரம்பித்தது. ‘பெங்களூருக்கு ட்ரெயின்ல போயி இறங்கினதும் ஆல்ரெடி புக் பண்ணி வெச்சிருந்த ட்ராவல்ஸ் பஸ்ஸில ஏறினோம். அதிலிருந்துதான், சீனியர் பேராசிரியர் ரவினோட செக்ஸுவல் ஹராஸ்மெண்ட்கள் ஸ்டார்ட் ஆனது.

பின்னாடி சீட்டுக்கு வந்து கேர்ள்ஸுங்களுக்கு நடுவுல உட்கார்ந்து நைஸா ஒரு பொண்ணோட தொடையை தொட்டிருக்கிறார். அதுக்கப்புறம், ஒரு பொண்ணு ரோடு கிராஸ் பண்ணும்போது வாலிண்டியாரா ஹெல்ப் பன்றமாதிரி ஷோல்டருக்குக்கீழ புடிச்சு டச் பண்ணிக்கிட்டே கிராஸ் பண்ணிக் கொண்டுபோயி விட்ருக்காரு. அன்னைக்கு, ஈவ்னிங்கே பஸ்ஸுக்குள்ள போன ஒரு பொண்ணோட பின்னால கையை வெச்சு தகாத செயலில் ஈடுபட்டுள்ளார். ஒரு போண்ண கட்டாயப்படுத்தி கைய மேலப்போட்டு செல்ஃபி எடுத்திருக்காரு. இப்படி, ஒவ்வொரு மாணவிக்கிட்டேயும் ஒவ்வொருவிதமா பாலியல் தொந்தரவு கொடுத்திருக்காரு. ஆனா, அவர் மீது சரியான நடவடிக்கை எடுக்கல’ என்று விலங்கியல் பேராசிரியர் ரவின் மீது மாணவிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீச. உண்மைதானா? என்று விசாரித்தபோதுதான் பாதிக்கப்பட்ட மாணவிகளே நம்மிடம் கொடுத்த வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியூட்டியது.

பாதிக்கப்பட்ட மாணவி-1:

‘பெங்களூர்ல இருக்குற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் இருக்குல்லீங்களா? அங்க, பஸ்ஸை ஒரு இடத்துல நிறுத்திட்டு நாங்க எல்லாரும் ரோடு கிராஸ் பண்ண வேண்டியிருந்தது. திடீர்ன்னு, வந்த புரோஃபசர் ரவீன் என் கையைப்புடிச்சு கிராஸ் பண்ணிக்கொண்டுபோயி விட்டாரு. அப்படி, கிராஸ் பண்ணும்போது என்னோட ஷோல்டருக்கு கீழ புடிச்சு ஒருமாதிரி டச் பண்ணிக்கிட்டே கிராஸ் பண்ணினார். டக்குனு அத புரிஞ்சுக்கிட்டு நான் விலக ஆரம்பிச்சுட்டேன். என்னோட முகம் ஒருமாதிரி கோபமா மாறினதைப் பார்த்ததும் ‘ம். பார்த்து போ’ ன்னு சொல்லிட்டு கேஷுவலா எதுவுமே நடக்காத மாதிரி போயிட்டாரு. ஏற்கனவே, அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கோம். ஆனா, இப்படி எனக்கு நடந்தது ரொம்பவே மெண்டலி டிஸ்டப்பாவே இருந்துச்சு. வீட்டுக்கு வந்தபிறகு ரூமுக்கு போனதுக்கப்புறம் மறுநாள் நைட்டுதான் ஃப்ரெண்ட்ஸுங்கக்கிட்ட சொன்னேன். அப்போதான், தெரிஞ்சது என் ஃப்ரெண்டுக்கும் இப்படி நடந்திருக்குங்குற விஷயம். அவர்க்கூட, இன்னொரு பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் இருக்காரு. ரெண்டுப்பேரும்தான் கூட்டு. டூருக்குதானே வந்திருக்கீங்க? எதுக்கு இந்தமாதிரி ஃபுல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டிருக்கீங்க? ஷார்ட்டா ட்ரெஸ் பண்ணிக்கவேண்டிதானேன்னு கமேண்ட் பாஸ் பண்ணினது மட்டுமில்ல.

ரோட்டுல நாய் வரும்போது திடீர்ன்னு ஒரு பொண்ணு பயந்து கத்திட்டா. ‘நாய் வாங்கிகொடுத்துதான் உன்னை கரெக்ட் பண்ணலாம்னு பார்த்தோம். நீ என்னடான்னு இந்த நாய்க்கே இப்படி பயப்படுறீயே?’ன்னு ரவீன் சார் அந்த பொண்ணுக்கிட்ட சொல்ல. கூட இருந்த சாமுவேல் டென்னிசன் சார் ‘அதானே’ ன்னு சிரிச்சுக்கிட்டே கமேண்ட் பண்ணி சப்போர்ட் பண்ணிக்கிட்டிருந்திருக்காரு. பாய்ஸுங்க கூட இருக்கும்போது இவங்க இப்படி பன்றதில்ல. தனியா இருக்குற சூழ்நிலைகளில் ரொம்ப அவருக்கு சேஃப்டியாதான் இப்படியெல்லாம் நடந்துக்குவாரு ரவீன். சரி, மத்தவங்களுக்கும் இப்படி நடந்திருக்குமோன்னு கேஷுவலா பேசும்போதுதான் நிறைய மாணவிகளிடம் மிஸ் பிஹேவ் பண்ணியிருக்காருன்னு தெரியவந்தது. இவ்ளோ, வல்கரால்லாம் இருப்பாங்களான்னு ஷாக்கா இருந்துச்சு. டிப்பார்ட்மெண்டிலேயும் இப்படித்தான் ரவீன் சார் நடந்துக்கிட்டிருப்பாரோன்னு சந்தேகம் வந்துடுச்சு. காலேஜ் பிரின்ஸ்பல்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணினா ரவீன் சாருக்கு நிச்சயமா பனிஷ்மெண்ட் கொடுப்பாங்கன்னு நினைச்சோம். ஆனா, பிரின்ஸ்பலோ, ‘ஃபர்ஸ்ட் டைம் அவர்மேல இப்படியொரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. வார்ன் பண்ணி அனுப்புவோம். செக்கெண்ட் டைம் பண்ணினா சிவியர் ஆக்ஷன் எடுப்போம்னு சொன்னாரு. ஆனா, 1997 லேயே இவர் மேல பாலியல் புகார்கள் இருந்திருக்கு. நாங்களாவது காலேஜ் ஸ்டூடண்ட்ஸ். இவர், நினைச்சாத்தான் படிப்பையே முடிக்கணும்ங்குற நிலைமையிலிருந்த பி.ஹெச்.டி. ஸ்டூடன்ட்ஸ்ங்களோட நிலைமை என்ன நடந்திருக்குமோன்னுனு யோசிக்கும்போதே பயமா இருக்கு. பெண் ஸ்டாஃபுங்கக்கிட்டேயும் தப்பா நடந்திருப்பாருன்னு சொல்றாங்க’ என்று குற்றஞ்ச்சாட்டுகிறார்.

பாதிக்கப்பட்ட மாணவி 2:

யானைகள் பார்க்க கூர்க்ங்குற ஏரியாவுக்கு போனோம். அப்போ, யானைகள் ரொம்ப தூரமா இருந்தது. யானைகள் ஃபோட்டோவுல தெரியுறமாதிரி கேர்ள்ஸ்ல்லாம் செல்ஃபி எடுத்துக்கிட்டிருந்தோம். திடீர்ன்னு வந்து செல்ஃபி எடுத்துக்கலாம்னு சொன்னார் ரவீன் சார். கொஞ்சம் தயங்கிக்கிட்டிருக்கும்போதே என் கையில இருக்கிற செல்ஃபோனை புடுங்கிக்கிட்டு அவரே செல்ஃபி எடுத்தாரு. அதுகூட தப்பில்ல. நான் செக்டு டி-ஷர்ட் போட்டிருந்தேன். அதை, அப்படியே ஃபோர்ஸா இழுத்து மேல கைப்போட்டு செல்ஃபி எடுத்தாரு. நான், ஒருமாதிரி ஃபீல் பண்ணினேன். அதேமாதிரி, இன்னொரு பொண்ணு பஸ்ஸில ஃபோனை மிஸ் பண்ணிட்டு வந்துட்டா. அதை, எடுக்கப்போனப்போ போயி பின்னால கைய வெச்சு என்னம்மா தேடுற?ன்னு கேட்டிருக்காரு. அவ, ‘பயத்துலேயே ஒண்ணுமில்ல சார்’ன்னு ஓடிவந்து சொன்னா. இப்படி, நிறைய கம்ப்ளைண்ட் இருக்கு காலேஜ் போயிட்டு பேசிக்கலாம்னு சொல்லிட்டாங்க. ஆனா, புகார் கொடுத்தும் மேனேஜ்மெண்ட் இதை பொருட்டாகவே எடுத்துக்கல. ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸுங்கதானே. இன்னும் சில நாட்கள்தான் காலேஜ். அப்படியே, எக்ஸாம் முடிச்சு அனுப்பிடலாம்னு பார்க்குறாங்க. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலைன்னா காவல்துறையிலதான் புகார் கொடுக்கலாம்னு இருக்கோம்.

இன்னும் பத்துநாளில் நானும் ரிட்டயர்டு ஆகப்போறேன். நீங்களும் போகப்போறீங்க எதுக்கு பிரச்சனைன்னு கேஷுவலா சொல்ற ஹெச்.ஓ.டி, சார் எப்போ போனாலும் வேலை வேலைன்னு சொல்லிக்கிட்டே இருக்காரு. எங்க, பெற்றோர்கள் எங்களை புரிஞ்சுக்கிட்டு எல்லோரும் புகார் கொடுக்கச்சொன்னதாலாதான் எங்களுக்கு சப்போர்ட்டா இருக்கிறதாலதான் தைரியமா புகார் கொடுத்திருக்கோம். ஆனா, கண்டக்ட் (நடத்தை) சர்டிஃபிகேட், டிகிரி சர்ட்ஃபிகேட்ல எல்லாம் கைய வெச்சிடுவோம்னு ரவீனும் சாமுவேல் டென்னிசனும் ஸ்டூட்ண்ட்ஸை மிரட்டிக்கிட்டிருக்காங்க.

எல்லோரும் புகார் கடிதம் எழுதி கையெழுத்துபோட்டு எங்களோட ஹெச்.ஓ.டி. மோசஸ் இன்பராஜ்க்கிட்ட கொடுத்தோம். பேருக்கு ஒரு விசாரணையை நடத்தி பேராசிரியர்கள் ரவீனும் சாமுவேல் டென்னிசனும் இன்னும் மூணுவருடத்துக்கு டூர் போகக்கூடாது. ஸ்டூடன்ஸுங்களோட ரெக்கார்டு நோட்டை திருத்தக்கூடாதுன்னு பனிஷ்மெண்ட் கொடுத்துட்டதா சொல்றாங்க. இவங்க எல்லாம் அக்கா தங்கச்சிக்கங்கூடதானே பொறந்தாங்க. இவங்க, குடும்பத்து பெண்களுக்கு இப்படியொரு பாதிப்பு ஏற்பட்டிருந்தா இப்படித்தான் அலட்சியமா ஆக்‌ஷன் எடுப்பாங்களா?’ என்று வேதனையோடு கேள்வி எழுப்புகிறார்.

பாதிக்கப்பட்ட மாணவி 3:

பஸ்ஸுல கேர்ள்ஸுங்க நாங்களே பின்னாடி இடமில்லாம ரொம்ப நெருக்கிக்கிட்டு விளையாடிக்கிட்டு உட்கார்ந்திருக்கோம். என் பேரை சொல்லிக்கிட்டே தேடிக்கிட்டுவந்தாரு ரவீன் சார். ஏதோ சொல்லவர்றாருன்னு நினைச்சுக்கிட்டு. நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து அவர உட்காரவெச்சேன். என், கைய புடிச்சு உட்காரு. உட்காருன்னு நெருக்கடியான சீட்டுல உட்காரவெச்சாரு. திடீர்ன்னு என் தொடையில கை வைத்தபடி பக்கத்துல இருக்கிற இன்னொரு பொண்ணுக்கிட்ட ‘எப்படியிருக்கும்மா ட்ரிப்பு?’ ன்னு சும்மா சம்பந்தமே இல்லாம பேச்சுக்கொடுத்துக்கிட்டிருந்தாரு. எனக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு. டூருக்கு எங்கக்கூட வந்த ரெண்டு பெண் ஸ்டாஃபுங்க எங்களுக்கு நடந்த எதைப்பற்றியுமே கண்டுக்கல. டூர் முடிஞ்சு வந்ததும் நாங்க எல்லோரும் கம்ப்ளைண்ட் பண்ணியிருந்தோம். பிப்ரவரி முதல்வாரத்தில் ஹெச்.ஓ.டி. மோசஸ் இன்பராஜும் அடுத்த ஹெச்.ஓ.டி மனுதாமாஸும் எங்கக்கிட்ட கூப்பிட்டு விசாரிச்சாங்க.

என்மேல கைய வைக்கிறாரு சார்ன்னு சொல்றேன். கொஞ்சம்கூட சீரியஸ் ஆகாம ரொம்ப விளையாட்டா எடுத்துக்கிட்டு ‘தெரியாமக்கூட கை பட்டிருக்கலாமில்லலயாம்மா? அப்பா மாதிரி கை வெச்சிருக்கலாமில்லையா?’ன்னு கமேண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அதேமாதிரி, டூர் ஹேப்பியா இருந்துச்சான்னா கேள்வி எழுப்பினாங்க. ஹேப்பியா இல்லைன்னு பாதிக்கப்பட்ட மாணவிகள் சொன்னதுக்கு ‘சரி. ஃபுரூட்டியா இருந்துச்சா?’ன்னு கேட்டு கிண்டலடிக்கிறதுன்னு எங்களோட வலியை வேதனையையும் புரிஞ்சுக்காம மேலும் ரணமாக்கினாங்க. இவங்க சரியா நடவடிக்கை எடுக்கமாட்டேங்குறாங்களேன்னு பிரின்ஸ்பல் அலெக்ஸாண்டர் சார்க்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணினோம்.

எல்லா விஷயமும் எனக்கு தெரியும்மான்னு சொன்னவர் எந்த ஆக்‌ஷனும் எடுக்கல. அதேமாதிரி, இது பாலியல் புகார். ஆனா, ஒரு பெண் பேராசிரியர்கூட ஆரம்பத்தில் எங்களை விசாரிக்கல’ என்று குற்றம்சாட்டுகிறார்.

போராட்டத்தில் இருக்கும் மாணவ-மாணவிகளோ, ‘டூர் பஸ்ஸுல போகும்போது ஒரு பொண்ணை டான்ஸ் ஆடச்சொன்னாரு பேராசிரியர் ரவீன். அந்தப்பொண்ணு கூச்சப்பட்டுக்கிட்டு ஆடல. உடனே, பஸ்ஸுல இனிமே பாட்டே போடக்கூடாதுன்னு சொல்லி நிறுத்திட்டார் ரவீன். மைசூர்க்கிட்ட போகும்போது ஒரு பையன் ஒரு பொண்ணு மயக்கம்போட்டு விழுந்துட்டாங்க. ஆனா, பையனை கண்டுக்காம. பொண்ணை மட்டும் தூக்கி உதவி பன்றேங்குற பேர்ல அந்த பொண்ணு மயக்கம் தெளிஞ்சு ‘வேணாம் சார் வேணாம்சார்’ன்னு சொல்லியும் சாப்பாடு ஊட்டிவிடுறேங்குறபேர்ல ஓவர் அக்கறை எடுத்துக்கிட்டு அவர் பண்ணின அலப்பறை கொஞ்சம் நஞ்சமில்லீங்க. இப்படி, ரவினோட அட்டகாசங்களை சொல்லிக்கிட்டேபோகலாம். இவர்மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி போராட ஆரம்பித்ததும் மாணவர்களை கொலைமிரட்டல் விடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. தாம்பரத்துலயிருந்து சென்ட்ரல் ட்ரெயின்ல போகும்போது, ‘எதுக்கு தேவையில்லாம போராட்டம் பண்ணிக்கிட்டிருக்கீங்க. சென்ட்ரல்கிட்ட ஆளுங்க நிற்குறாங்க. கத்திய எடுத்து குத்திட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. சி.எம்.மில்ல. பி.எம்மே வந்தாலும் எங்கள ஒண்ணும் பண்ணமுடியாது’ன்னு பசங்கள மிரட்டியிருக்காங்க. பாதிக்கப்பட்ட பொண்ணு தங்கியிருக்கிற இடத்துக்கு நாலு பசங்க போயி ‘உன்கிட்ட என்ன எவிடென்ஸ் இருக்கு? எதுக்கு தேவையில்லாம கம்ப்ளைண்ட் பண்ணியிருக்க? அவ்ளோதான்’ன்னு கொலைமிரட்டல் விட்டுட்டுப்போயிருக்காங்க. ஆனாலும், நாங்க பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சார்பா போராடுறதை கைவிடப்போறதில்ல. நக்கீரன்தான் எங்களுக்கு துணையா இருக்கணும்’ என்கிறார்கள் கோரிக்கையாக.

20 வருடங்களுக்குமுன் பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த எம்.சி.சி. கல்லூரி முன்னாள் மாணவி பிரிட்ஜட் மேரி நம்மிடம், ‘ஜனவரி மாதம் மாணவர்கள் புகார் கொடுத்தும் ஏப்ரல் மாதம் வந்தபிறகும் எந்தவித முறையான நடவடிக்கையும் பேராசிரியர் ரவீன் மீது எடுக்கப்படவில்லை. 1999 ஆம் வருடத்தில் நானும் அந்த கல்லூரியில் பி.எஸ்.சி. ஜுவாலஜி படித்தேன். பிராக்டிகல் சைன் வாங்கச்சென்றால் கையை பிடித்து தவறாக நடந்துகொள்ள முயற்சிப்பார். அவரால், பாதுகாப்பாற்ற நிலையில்தான் படித்தோம். எங்களுடைய ஜூனியர் மாணவிகளிடம் பேராசிரியர் ரவீன் தவறாக நடக்க முயற்சித்ததாக அப்போதே ஹெச்.ஓ.டி. சாமுவேல் சுந்தர்ராஜிடம் புகார் கொடுத்தோம். 15 நாட்கள் அவர் கல்லூரிக்கு வரவில்லை. அப்போதே, மெட்ராஸ் கிறிஸ்துவக்கல்லூரி நிர்வாகம் அவர் மீது சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை வருடங்கள் பல நூற்றுக்கணக்கான மாணவிகள், பெண் பேராசிரியர்கள் பாதிகப்படாமல் இருந்திருப்பார்கள். ஆனால், இப்போது மாணவிகள் இவ்வளவு தெளிவாக புகார் கொடுத்தபிறகும் இது முதல்முறையான புகார் என்று ரவீன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அதிகார பலத்தில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழும்புகிறது’ என்கிறார் குற்றச்சாட்டாக.

மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் பெண் முதல்வரும் கல்லூரி கமிட்டி கன்வீனருமான விஜயகுமாரி ஜோசப்பிடம் பலமுறை வலியுறுத்தி மிகவும் தாமதாகத்தான் விசாரித்தார்கள். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட மாணவிகளையும் பேராசிரியர்களையும் ஒன்றாக அமரவைத்தும் விசாரித்திருக்கிறார்.

இந்நிலையில், குற்றஞ்சாப்பட்ட விலங்கியல் பேராசிரியர்கள் ரவீனையும் சாமூவேல் டென்னிசனையும் செல்ஃபோனில் நாம் தொடர்புகொண்டபோது, ஸ்விட்ச் ஆஃப் நிலையில் உள்ளது.

மாணவிகளின் புகாரை விசாரித்த ஹெச்.ஓ.டி. மைக்கேல் இன்பராஜ் மற்றும் எம்.சி.சி. கல்லூரி பிரின்ஸ்பல் அலெக்ஸாண்டர் ஆகியோரை பலமுறை தொடர்புகொண்டபோதும். மெசேஜ் அனுப்பியும்கூட அவர்கள் அட்டெண்ட் செய்யவும் இல்லை. விளக்கம் அளிக்கவுமில்லை. கல்லூரியின் தொலைபேசி எண்களுக்கு தொடர்புகொண்டபோதும் அதேநிலைதான். கல்லூரி தரப்பிலிருந்து விளக்கமளித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறது. கல்லூரி கன்வீனர் விஜயகுமாரி ஜோசப் விசாரித்து அறிக்கை கொடுத்தபிறகும்கூட குற்றஞ்ச்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மீது இதுவரை சட்டரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குமுறிவெடிக்கிறார்கள் மாணவ-மாணவிகள் தரப்பு.

காவல்துறை, தமிழ்நாடு மகளிர் ஆணையம், மகளிர் அமைப்புகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து விசாரித்தால்தால் பேராசிரியர்களால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தீர்வு கிடைக்கும். எத்தனை மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடினார்கள் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

Leave a Reply