Categories
அரசியல்

கருணாநிதி உடல் நிலை குறித்து வதந்தி கடைகள் அடைப்பால் திடீர் பரபரப்பு

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து, திடீர் வதந்தி பரவியதால், பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.ஒவ்வாமை நோய் தொடர்பாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, காவேரி மருத்துவமனையில், கருணாநிதி, ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். அவரது உடல் நலம் சீராக இருந்தாலும், வயோதிகம் காரணமாக, உடல் அளவிலும், மனதளவிலும் அவர் தளர்ந்துள்ளார். வீட்டில், கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளதாகவும், அருகில் இருப்பவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. சில நாட்களாக, அவருக்கு மூக்கு வழியாக, ‘டியூப்’ மாட்டப்பட்டு, அதன் மூலம் திரவ உணவு வழங்கப்பட்டது; தற்போது, டியூப் அகற்றப்பட்டுள்ளது.மேலும், இதய துடிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு போன்ற வற்றை அளவிடுவதற்கான சோதனைகள் தொடர்கின்றன.
கருணாநிதியின் குடும்ப டாக்டர் கோபால், காவேரி மருத்துவமனை டாக்டர் ஸ்ரீதர், சர்க்கரை நோய் நிபுணர் மோகன் ஆகியோர் இடம் பெற்ற குழு, கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகிறது.இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவிலும், நேற்று காலையிலும், கருணாநிதியின் உடல் நிலை மோசமாக உள்ளதாக, தகவல் பரவியது. உடனடியாக, அவரது வீட்டுக்கு, முக்கிய நிர்வாகிகள் வந்தனர். ஆனால், கருணா நிதியை சந்திக்க, அவர்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை. கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, மகள் கனிமொழி, அவரது கணவர் அரவிந்தன், மூத்த மகள் செல்வி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நேரு, பொன்முடி ஆகியோர் மட்டும், கருணாநிதியை சந்தித்துள்ளனர். இந்நிலையில், சி.ஐ.டி., காலனி வீட்டில் இருந்து, ராஜாத்தி எடுத்து வந்த தயிர் சாதத்தை, கருணாநிதி நேற்று சாப்பிட்டதாகவும், குடும்பத்தினரிடம் சில வார்த்தைகள் பேசியதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கருணாநிதியின் உடல் நிலை குறித்து, அவரது உதவியாளர் சண்முகநாதன் கூறுகையில், ”கருணாநிதி நலமுடன் இருக்கிறார்; வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அதனால், அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மறுப்பு செய்தி வெளியிடப்பட்டு உள்ளது,” என்றார்.’எல்லாமே வதந்தி’சென்னையில் இருந்து நேற்று மதுரை திரும்பிய அழகிரியிடம், விமான நிலையத்தில் நிருபர் கள், ‘மீண்டும் தென் மண்டல அமைப்பு செயலர் பதவி வழங்கப்படுமா; கருணாநிதி உடல்நலம் குறித்து பரவும் தகவல் உண்மையா, மகன் தயாநிதிக்கு கட்சி பதவி வழங்கப்படுமா?’ என, வரிசையாக கேள்வி எழுப்பினர். அதற்கு, ”வதந்தி… வதந்தி… வதந்தி,” என, மட்டும் அவர் பதில் அளித்தார்.- நமது நிருபர் –

Leave a Reply