Categories
அரசியல்

ஜெ., பேரவைக்கு போட்டியாக சசி பெயரில் முளைக்கும் அமைப்பு

அ.தி.மு.க.,வில், வலுவான அமைப்பாக உள்ள ஜெ., பேரவைக்கு போட்டியாக, தஞ்சாவூர் சுற்றுவட்டாரங்களில், சசிகலாவிற்கு ஆதரவாக முளைக்கும் பேரவையால், கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின், கட்சியின் பொது செயலராக சசிகலா வர வேண்டும் என, கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், இதை விரும்பவில்லை. இதனால், சசிகலாவுக்கு ஆதரவாக வைக்கப்படும், ‘பிளக்ஸ்’ பேனர்கள் மீது கறுப்பு மை, சாணம் போன்றவற்றை அடித்து, தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் அடிமட்ட தொண்டர்களை ஓரங்கட்டும் விதமாக, சசிகலா பெயரில், ‘சின்னம்மா பேரவை’ என, சிலர் துவக்கி வருகின்றனர்.
இதற்கு, உறுப்பினர் சேர்க்கையும் துவங்கியுள்ளது. இந்த பேரவை மூலம், சசிகலாவின் உறவினர்கள் தங்களுக்கு வேண்டிய நபர்கள் வாயிலாக, கட்சிக்காக உழைத்த தொண்டர்களை ஓரங்கட்டி விட்டு, பதவிகளை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தொண்டர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.கட்சி தொண்டர்கள் சிலர் கூறியதாவது: சசிகலா பொதுச் செயலராக வரும் பட்சத்தில், அவரது உறவினர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஆனால், கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டர்களின் நிலைமை என்னவாகும் என்பது கேள்விக்குறியே. தற்போது, தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி பகுதிகளில், சசிகலாவிற்கு ஆதரவாக பலர் களத்தில் இறங்கிஉள்ளனர். இதில், அவரது உறவினர்களே அதிகம். இதற்காக தற்போது, சசிகலா பேரவையை துவங்கி, அதில் உறவினர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். பேரவை பொறுப்பாளராக, இளவரசியை நியமிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.அ.தி.மு.க.,வில் ஜெ., பேரவையே வலுவாக இருந்து வந்தது. ஜெயலலிதா இருந்த போதே, சிலர் சசிகலா பெயரில், ஒரு சில அமைப்புகளை துவங்கி, கட்சியில் இருந்தே துாக்கி எறியப்பட்டனர்.தற்போது, ஜெ., இல்லாத நிலையில், அவரது பெயரில் செயல்படும் பேரவையை டம்மியாக்கி, சசிகலா பேரவையை துவங்கும் சிலரது முயற்சி, கட்சி தொண்டர்களை வேதனையில் தள்ளிஉள்ளது. — நமது நிருபர் –

Leave a Reply