Categories
அரசியல்

‘சசிகலா பொதுச்செயலராக விதிகள் தளர்த்தப்படும்’ : ‘மாஜி’ அமைச்சர் பொன்னையன் தகவல்

சென்னை: ”அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார்; அதற்கேற்ப கட்சி விதிகள் தளர்த்தப்படும்,” என, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கூறினார்.இது குறித்து, பொன்னையன் கூறியதாவது: எம்.ஜி.ஆரின் மனசாட்சியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. அவரின் மனசாட்சியாக திகழ்ந்தவர்; வாழ்ந்து வருபவர் சசிகலா. 33 ஆண்டுகளாக, ஜெயலலிதாவின் சுக, துக்கங்களில் பங்கேற்றவர். அதனால், அவரே பொதுச்செயலர் என்பது கட்சியின் முடிவு. அவர் ஏகமனதாக தேர்வு செய்யப் படுவார்; சந்தேகம் இல்லை. இதற்கு, அவரது சம்மதம் வேண்டும் என, கட்சி நிர்வாகிகள், 64 ஆயிரம் கிளைகளிலும், தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
அவரின் சம்மதத்தை வேண்டுகிறோம். அவர், 1982ல் இருந்து, ஜெயலலிதாவோடு ஒன்றாக இணைந்து, அவர் அரசியலில் உச்ச நிலைக்கு வர, ஆணி வேராக இருந்தவர்.ஜெ., பேரவை துவக்கவும், 30 லட்சம் உறுப்பினர்கள் இருந்த, அ.தி.மு.க.,வை, 1.50 கோடி உறுப்பினர்கள் உடைய இயக்கமாக மாற்றவும், உறுதுணையாக இருந்தவர். சசிகலா கட்சிக்கு அச்சாரம்; ஜெயலலிதாவின் மனசாட்சி. எனவே, அவர் ஏகமனதாக பொதுச் செயலராக தேர்வு செய்யப்படுவார். ஜெ., வாரிசு அவரே என, முடிவான பின், வேறு பேச்சுக்கு இடமில்லை. அவருக்காக கட்சி விதிகள் தளர்த்தப்படும். ஜெயலலிதாவோடு சிறையில், பல துயரங்களை அனுபவித்துள்ளார்; தியாகம் செய்துள்ளார். குடும்பம், பாசம் துறந்து ஜெயலலிதாவே தெய்வம் என, அவருடன் இணைந்து வாழ்ந்தார். அவரை விட சிறந்தவர் யாரும் இல்லை என்பது, கட்சியின் ஏகோபித்த முடிவு.ஜெ., செல்வாக்கு; எம்.ஜி.ஆர்., சொல்வாக்குடன் சசிகலா உள்ளதை கண்டு பொறுக்க முடியாதோர், பொறாமைப் படுகின்றனர். ஜெயலலிதாவிடம், பிரச்னையை கூறினால், ‘சின்னம்மாவிடம் கலந்து பேசுங்கள்’ என்பார்; அவர், ஜெயலலிதாவின் நிழலாக செயல்பட்டவர். சசிகலா குறித்து கட்சி தொண்டர்கள் யாரும் அவதுாறு பரப்பவில்லை; அரசியல் எதிரிகள் பரப்புகின்றனர். அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். சமூக வலை தளங்களில், கொச்சைப் படுத்தினால், சசிகலாவை ஒழித்து விடலாம்; இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடலாம் என, நினைத்து, அவதுாறு பரப்புகின்றனர்; அதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது. இவ்வாறு பொன்னையன் கூறினார்.

Leave a Reply