Categories
இந்தியா

குடியரசு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

நாட்டின் 68-ஆவது குடியரசு தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் “அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்தார். தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சையீது சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும் பலரும் பங்கேற்ற இவ்விழாவில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அத்வானி வாழ்த்து: குடியரசு தினத்தையொட்டி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தில்லியில் உள்ள தனது இல்லத்தில் மூவர்ணக் கொடியேற்றினார்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் இனிப்புகளை வழங்கினார். அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில், “குடியரசு தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். உலகிலேயே முன்னணி நாடாக இந்தியா உருவெடுப்பதைக் காண்பதற்கு நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபடுவோம் என்பது உறுதி’ என்றார். பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு: இதனிடையே, பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸை அடுத்துள்ள அட்டாரி-வாகா எல்லையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தானின் எல்லைக் காவல் படை வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்திய வீரர்கள் அளித்த இனிப்புகளையும், பழங்களையும் பாகிஸ்தான் எல்லைக் காவல் படையின் கமாண்டரும் பெற்றுக் கொண்டதாகவும், இரு தரப்பினரும் கைகுலுக்கிக் கொண்டதாகவும் பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply