Categories
இந்தியா

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதி நாளை அறிவிப்பு

புதுடெல்லி : பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம், வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதேபோல், உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 27ம் தேதியுடன் முடிவடைகிறது. வழக்கமாக இந்த ஐந்து மாநிலங்களுக்கும் ஒன்றாகவே தேர்தல் அறிவிக்கப்படுவது வழக்கம். இம்மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் தேதி நாளை (ஜன.4)-ல் அறிவிக்கப்பட உள்ளது. வழக்கமாக தேர்தல் தேதியை அறிவிக்கும் முன், சம்பிரதாய முறைப்படி, ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கையை தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளருக்கும், மத்திய அமைச்சரவை செயலாளருக்கும் அனுப்பி வைக்கும்.
இதேபோல், தற்போது தேர்தல் நடக்க உள்ள 5 மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், மத்திய அமைச்சரவை செயலாளருக்கும், ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான சுற்றறிக்கையை தேர்தல் ஆணையம் கடந்த 28-ம் தேதி அனுப்பியது. இந்த சுற்றறிக்கையில், ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். அரசு அதிகாரிகள், வாகனங்களை தனிப்பட்ட செயல்களுக்காக பயன்படுத்தக் கூடாது. அரசு நிதியை விளம்பரங்களுக்கு பயன்படுத்தக் கூடாது’ என்பது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தை தவிர மற்ற மாநிலங்கள் சிறியவை என்பதால், ஒரே கட்டமாக அங்கு தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது என்றும், உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply