Categories: இந்தியா

மே 3 வரை! ஊரடங்கை நீட்டித்து அறிவித்தார் மோடி; ஏழு அறிவுறுத்தல்களையும் வெளியிட்டார்

புதுடில்லி: நாடு முழுதும், ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, ஊரடங்கை, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நீட்டிப்பதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், வரும், 20ம் தேதிக்குப் பின், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாகவும், பிரதமர் அறிவித்துள்ளார். ஊரடங்கில் பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் குறித்த விரிவான அறிக்கை, இன்று வெளியிடப்பட உள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுதும் வேகமாக பரவி, பெரும் உயிரிழப்புகளையும், பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. கோரிக்கை:நம் நாட்டிலும், இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
மஹாராஷ்டிரா, டில்லி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாடு தழுவிய, 21 நாள் ஊரடங்கு உத்தரவை, கடந்த மாதம், 24ல், பிரதமர் மோடி அறிவித்தார். ஆனாலும், வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கை, இந்த மாத இறுதி வரை நீட்டிக்கும்படி, பிரதமர் மோடியிடம், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே அறிவித்த, 21 நாள் ஊரடங்கு, நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று காலையில், ‘டிவி’ மற்றும் ரேடியோவில், நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கை, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நீட்டிப்பதாக, அவர் அறிவித்தார். தியாக மனப்பான்மை:பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில், நாட்டு மக்கள், தியாக மனப்பான்மையுடனும், ஒழுக்கத்துடனும் செயல்படுகின்றனர். கடுமையான பாதிப்பு இருந்தபோதும், அதை பொருட்படுத்தாது, நாட்டுக்காக போராடி வரும் மக்களுக்கு நன்றி. அரசின் ஊரடங்கு உத்தரவால், பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உணர்ந்துள்ளேன். சிலருக்கு உணவு கிடைப்பதில் பிரச்னை உள்ளது. சிலருக்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதில் பிரச்னை உள்ளது. மற்றும் சிலருக்கு, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பது பிரச்னையாக உள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை காப்பற்ற, ஒவ்வொருவரும், போர்க்களத்தில் செயல்படும் வீரர்கள் போல போராடுகிறீர்கள்; இது தான், இந்தியா. நம் அரசமைப்பு சட்டம், இதைத் தான் நமக்கு கற்றுத் தந்துள்ளது. இன்று, சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாள். நம் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம், அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். கடின உழைப்புடனும், உறுதியுடனும் சவால்களை முறியடிக்க வேண்டும். அம்பேத்கரின் வாழ்க்கை, இதற்கு, முன் உதாரணமாக அமைந்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரின் சார்பிலும், இந்த நாளில், அம்பேத்கருக்கு தலை வணங்கி மரியாதை செலுத்துகிறேன். இது பண்டிகை காலம், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆனால், அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, மக்கள், தங்கள் வீடுகளுக்குள்ளேயே புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இந்த நல்ல நாளில், நாட்டு மக்கள் அனைவரது ஆரோக்கியமான வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன். கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய், உலகம் முழுவதும் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை, நாம் அனைவரும் பார்க்கிறோம்; அறிந்து வைத்துள்ளோம். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, நாம் முன் கூட்டியே நடவடிக்கைளை துவக்கி விட்டோம். முதல் நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதுமே, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பரிசோதிக்கும் நடவடிக்கையை துவங்கி விட்டோம். வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை, 100 என்ற எண்ணிக்கையை தொட்டதும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை தனிமை முகாமில் வைத்தோம். ஷாப்பிங் மால், கிளப்புகள் அடைக்கப்பட்டன. பாதிப்பு, 550 என்ற எண்ணிக்கையை தொட்டதும், 21 நாள் ஊரடங்கை அறிவித்தோம். பிரச்னையின் தீவிரம் கருதி, மிகவும் விரைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் கூட, கொரோனா வைரஸ், மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் பாதிப்பு குறைவாகவே உள்ளது. ஊரடங்கை விரைவாக செயல்படுத்தியதே இதற்கு காரணம். நம் நாட்டை விட, 25 அல்லது 30 மடங்கு அதிக பாதிப்பு, மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோய்க்கு பலியாகி விட்டனர். ஒருங்கிணைந்த செயல்பாடு, விரைவான நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக, நமக்கு பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதன்மூலம், இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவை எடுத்துள்ளோம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சமூக விலகல் நடவடிக்கை மூலம், ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு விஷயத்தில், நாம் மேற்கொண்ட நடவடிக்கையை, பல நாடுகளும் பாராட்டுகின்றன்றன. ஊரடங்கை அமல் படுத்தியிருக்காவிட்டால், பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும். பல கடுமையான நடவடிக்கைகள் எடுத்த போதிலும், நாட்டின் பல பகுதிகளில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால், ஊரடங்கை நீட்டிக்கும்படி, மருத்துவ நிபுணர்களும், சுகாதாரத் துறை அதிகாரிகளும், மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்தன. பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடன் பேசியபோதும், அவர்களும் இதையே வலியுறுத்தினர். அனைத்து தரப்பினரும் அளித்த ஆலோசனையின் அடிப்படையில், ஊரடங்கை, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நீட்டிப்பது என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், இந்த ஊரடங்கு காலத்தில், அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும், கொரோனா வைரஸ், புதிதாக ஒரு பகுதிக்கு பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிதாக, ஒருவருக்கு அல்லது ஒரு சிறிய பகுதிக்கு வைரஸ் பரவினாலும், அது, மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகவே இருக்கும். நாட்டின் எதிர்காலத்தையும், அது பாதித்து விடும். நம் கடுமையான முயற்சிக்கு, பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும், இந்த விஷயத்தில், அடுத்து வரும் ஒரு வாரம், நமக்கு மிகவும் முக்கியமானது. வரும், 20ம் தேதி வரை, ஒவ்வொரு நகரம், ஒவ்வொரு மாவட்டம், ஒவ்வொரு மாநிலத்திலும், கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். ஊரடங்கை எந்த அளவுக்கு மக்கள் மதித்து நடக்கின்றனர் என்பதை அரசு கண்காணிக்கும். எந்த பகுதியில், வைரஸ் பரவாமல் தடுக்கப்பட்டதோ, அந்த பகுதிகளில், வரும், 20ம் தேதிக்குப் பின், அத்தியாவசிய சேவைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். ஆனால், நிபந்தனைகளுடன் மட்டுமே கட்டுப்பாடு தளர்வு இருக்கும். ஊரடங்கு உத்தரவு மீறப்பட்டால், கட்டுப்பாடு தளர்வு, உடனடியாக வாபஸ் பெறப்படும். எனவே, மக்கள் மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். ஊரடங்கின் போது பின்பற்றப்பட வேண்டிய விரிவான வழிகாட்டும் அறிக்கை, நிபந்தனைகள் இன்று வெளியிடப்படும். ஊரடங்கு உத்தரவால், நம் நாட்டில் உள்ள ஏழை சகோதர – சகோதரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இவர்களது நிலையை கருத்தில் வைத்தே, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்த ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மூலமாக, இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். பல மாநிலங்களில் இது அறுவடைக் காலம் என்பதால், விவசாயிகளின் பிரச்னைக்கும் தீர்வு அறிவிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள் நம்மிடம் போதிய அளவில் கையிருப்பு உள்ளன. இவை, மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு ஜனவரியில், நம்மிடம், கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் ஒன்று மட்டுமே இருந்தது. தற்போது, நாடு முழுவதும், 220 இடங்களில் பரிசோதனை மையங்கள் உள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, நம்மிடம், ஒரு லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. இதுதவிர, கொரோனாவுக்காக சிகிச்சை அளிப்பதற்காகவே, பிரத்யேகமாக, 600 மருத்துவமனைகள் இயங்குகின்றன. நாட்டின் நலன் கருதியும், மனித குலத்தின் நலன் கருதியும், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும்படி, நம் நாட்டின் உள்ள இளம் விஞ்ஞானிகளிடம் கோரிக்கை வைக்கிறேன். அரசின் விதிமுறைகளை பொறுமையுடன் பின்பற்றினால், கொரோனா வைரஸ் உள்ளிட்ட எந்த பேராபத்தையும் நாம் சமாளிக்க முடியும். இந்த விஷயத்தில், அனைத்து தரப்பினரும், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கவலை வேண்டாம்!போதிய அளவு மருந்து மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், அரசிடம் கைவசம் உள்ளன. எனவே, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என, யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு, அனைத்து தரப்பினரும், தங்களால் முடிந்த அளவு உதவ வேண்டும். – அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,ஏழு உறுதிமொழி!பிரதமர் மோடி, நேற்று உரையாற்றியபோது, நாட்டு மக்கள் அனைவரும், ஏழு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அந்த உறுதிமொழிகள்: 1. மூத்த குடிமக்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஏற்கனவே நோய்களால் அவதிப்பட்டு வருபவர்களை மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்2. சமூக விலகல் நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்3. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல நேர்ந்தால், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்; அது, கைக்குட்டையாக கூட இருக்கலாம் 4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். மருத்துவ உதவி தேவைப்படுவோர், மத்திய அரசின், ‘ஆரோக்கிய சேது’ என்ற, ‘ஆப்’ எனப்படும் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்5. ஏழைகளுக்கு முடிந்த வரை உதவ வேண்டும். அவர்களது உணவுத் தேவையையாவது பூர்த்தி செய்ய வேண்டும்6. உங்கள் நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் பணியாற்றுவோரிடம் கருணை காட்டுங்கள். அவர்களை பணி நீக்கம் செய்து விடாதீர்கள்; அவர்களது வாழ்வாதாரத்தை சீர்குலைத்து விடாதீர்கள்7. கொரோனா ஒழிப்பு பணியில் போர் வீரர்களாக செயல்பட்டு வரும், டாக்டர், நர்ஸ், சுகாதார ஊழியர்கள், போலீசார் ஆகியோருக்கு மரியாதை செலுத்துங்கள். ஏழைகளுக்கான திட்டம் எங்கே? காங்கிரஸ் தலைவர்கள் பாய்ச்சல்’பிரதமர் மோடியின் உரையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவும் வகையிலான எந்த திட்டமும் இடம்பெறவில்லை’ என, காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: தலைமைப் பண்பு என்பது, நாட்டு மக்கள் என்ன செய்ய வேண்டும் என, அவர்களுக்கு நினைவூட்டுவது மட்டும் அல்ல; அவர்களுக்காக அரசு என்ன செய்யப் போகிறது என்பதை அறிவிப்பதே, நல்ல தலைமைக்கு அல்ல. கொரோனா வைரஸ் குறித்து அதிகமாக பேசி விட்டோம். ஆனால், கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான செயல் திட்டம் என்ன என்பதை, பிரதமர் அறிவிக்காதது ஏன்? இவ்வாறு, அவர் கூறினர். காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியதாவது: முதலில், 21 நாள் ஊரடங்கு, பின், 19 நாள் ஊரடங்கால், நாட்டில் உள்ள ஏழைகள், தங்களைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவு பொருட்கள் உள்ளன; நிதி இருக்கிறது; ஆனால், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்காக, அரசு, உணவும் கொடுக்கவில்லை; நிதியும் கொடுக்கவில்லை. ஏழைகள் படும் இந்த அவஸ்தையை பார்த்து, என் தேசமே கதறுகிறது. இவ்வாறு, அவர் கூறினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,”பிரதமர் ஆவேசமாகவும், உத்வேகம் அளிக்கும் வகையிலும் பேசுகிறார். ஆனால், எல்லாமே வெத்து வேட்டாக உள்ளது. ஏழைகள், நடுத்தர வர்க்கம், தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் தரும் வகையிலான எந்த அறிவிப்பும், அவர் உரையில் இடம் பெறவில்லை,” என்றார். ‘பிரதமர், தன் உரையில், பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்புக்கு எவ்வாறு தீர்வு காண்பது குறித்த, எந்த விஷயத்தையும் தெரிவிக்கவில்லை’ என, சிவசேனா மற்றும் தேசியவாத காங்., கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago