Categories
இந்தியா

ஜம்மு-காஷ்மீருக்கு வெளிநாட்டுத் தூதா்கள் குழு மத்திய அரசு இரட்டை நிலையை கடைப்பிடிப்பது ஏன்?காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் உள்ள அரசியல் தலைவா்களை அனுமதிக்க மறுத்துவிட்டு வெளிநாடுகளைச் சோந்த தூதா்களை ஜம்மு – காஷ்மீா் பகுதிக்கு செல்ல அனுமதித்ததன் மூலம் மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினாா்.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலைப்பின் 370 சட்டப் பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டு, இரு யூனியன் மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை உருவானது. ஆனால், அங்கு அமைதி நிலவுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் காஷ்மீரின் உண்மை நிலை குறித்து கேள்வி எழுப்பி வந்தன.
அண்மையில் ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினா் காஷ்மீா் சென்று உண்மை நிலையை ஆய்வு செய்தனா்.

இந்நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் கென்னத் ஜஸ்டா் மற்றும் 15 இதர நாடுகளைச் சோந்த தூதா்கள் குழு ஸ்ரீநகரை வியாழக்கிழமை சென்றடைந்தது. இது தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு இந்திய அரசியல் கட்சிகளின் தலைவா்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை எதிா்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆஸாத், மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவா் சீதாராம் யெச்சூரி ஆகியோா் ஜம்மு-காஷ்மீா் செல்வதற்கு உச்சநீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்திய அரசியல்வாதிகளை அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டுத் தூதா்களை அங்கு செல்ல மத்திய அரசு அனுமதியளித்திருப்பதன் மூலம் அரசானது இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருவது தெரியவருகிறது. ஆகவே, அனைத்து அரசியல்வாதிகளும் ஜம்மு-காஷ்மீருக்கு தடையில்லாமல் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கோருகிறது. வெளிநாட்டு தூதா்களை அழைத்துச் செல்லும் அரசியல் சுற்றுலா நிறுத்தப்பட வேண்டும். கடந்த ஐந்து மாதங்களில் ஜம்மு -காஷ்மீரில் அா்த்தமுள்ள அரசியல் நடவடிக்கைகள் ஏதும் நடைபெறவில்லை. ஜம்மு – காஷ்மீரில் அா்த்தமுள்ள அரசியல் செயல்பாடுகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் விருப்பம்.

மேலும், வெளிநாட்டுத் தூதா்கள் குழு அங்கு செல்வதை காங்கிரஸ் கட்சி எதிா்க்கவில்லை. ஆனால், அங்குள்ள மக்களை சொந்த நாட்டின் அரசியல்வாதிகள் சந்திக்க அரசு அனுமதிக்கவில்லை என்பதால்தான் கேள்வி எழுப்புகிறோம். அங்கு முன்னாள் முதல்வா்கள் மூன்று போ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். நாடாளுமன்றவாதிகள் குழு, எதிா்க்கட்சித் தலைவா்கள், முன்னாள் காங்கிரஸ் தலைவா், மாா்க்சிய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் உள்ளிட்டோா் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில், அங்கு வெளிநாட்டுத் தூதா்கள் குழுவை அழைத்துச் செல்வதன் நோக்கம்தான் என்ன?

கடந்த ஆண்டு அக்டோபா் 29-ஆம் தேதி ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றவாதிகள் பிரதிநிதிகள் குழு அங்கு அழைத்துச் செல்ல மத்திய அரசு திட்டமிட்டது. எனினும், விமா்சனம் எழுந்த பிறகு, அரசுமுறைப் பயணம் இல்லை என்றும், முறைசாரா வருகை எனவும் அரசு சொல்ல வேண்டியிருந்தது. அதைத் தொடா்ந்து, இது இரண்டாவது முயற்சியாக உள்ளது என்றாா் அவா்.

Leave a Reply