Categories
தலைப்புச்செய்திகள்

கட்டுக்கதைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு கொண்டு வருகிறது ஃபேஸ்புக்! #FaceBookUpdate

ஃபேக் ஐடிகள் மட்டுமல்ல ஃபேக் செய்திகளும், கதைகளும் ஃபேஸ்புக்கில் மிகப்பிரபலம். ஏதாவதொரு கடவுள் போட்டோவை போட்டு, இதை பார்த்த மாத்திரத்தில் ஷேர் செய்யுங்கள், உடனே ஷேர் செய்தால் நல்லது நடக்கும். இல்லையெனில் சாமி கண்ணைக் குத்தும் ரக போஸ்ட்களை ஃபேஸ்புக்கில் இருக்கும் அனைவருமே கடந்து தான் வந்திருக்கிறோம். சமீபத்தில் கூட அம்புஜா சிமி என ஒரு பேக் ஐடிக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருந்ததும், அது முடக்கப்பட்ட செய்தி வந்தவுடன் சிமி மீம்ஸ் வைரல் ஆனது நினைவிருக்கலாம்.

ஃபேக் ஐடி, ஃபேக் நியூஸ், கட்டுக்கதைகள் போன்றவற்றை பலரும் நம்பிவிடுகிறார்கள், இதனால் பொய்யான தகவல்கள் எளிதில் பரப்பப்பட்டு வருகின்றன.

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக்கில் உலவிய பல்வேறு கட்டுக்கதைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்கர்கள் குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதையடுத்து கடந்த நவம்பர் 19 ஆம் தேதி, கட்டுக்கதைகளை, பொய்ச் செய்திகளை கட்டுப்படுத்த ஃபேஸ்புக் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என விளக்கி மிக நீண்ட ஒரு பதிவை எழுதியிருந்தார் பேஸ்புக் நிறுவினர் மார்க் சக்கர்பெர்க் இந்நிலையில் தற்போது கட்டுக்கதைகளுக்கு எப்படி கட்டுப்பாடு கொண்டு வரப் படவுள்ளது என்ற செயல்முறையை விவரித்துள்ளது ஃபேஸ்புக்.

” மக்களின் ஊடகம் ஃபேஸ்புக். மக்கள் அங்கே எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அவர்கள் எல்லோரும் சொல்லும் தகவல்கள், பகிரும் தகவல்கள் நூறு சதவீதம் உண்மையாகத் தான் இருக்கும் என சொல்ல முடியாது. எது சரி, எது தவறு என எப்போதும் நாட்டாமை வேலை பார்த்துக் கொண்டிருப்பது சாத்தியமற்றது. எனினும் இது போன்ற தவறான செய்திகளை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் முதற்கட்டமாக மக்களே எது கட்டுக்கதை, பொய்ச் செய்திகள் என ஃபேஸ்புக்குக்கு தெரிவிக்கும் வகையில் செட்டிங்களில் சில ஆப்ஷன்களை சேர்த்திருக்கிறோம்.

உங்களுக்கு ஃபேஸ்புக்கில் உள்ள ஏதாவதொரு நிலைத்தகவல் (POST) கட்டுக்கதை வகையறா என தெரிந்தால், அந்த நிலைத்தகவலின் வலது மூலையில் கிளிக் செய்து ரிப்போர்ட் போஸ்ட் என்பதை கிளிக் செய்யவும். இனிமேல் அதில் IT’S A FAKE NEWS STORY என்ற ஆப்ஷன் சேர்க்கப்படும். அதை கிளிக் செய்யவும். அதற்கடுத்ததாக என்ன காரணம் என தெரிவிக்கவும்.

பேஸ்புக்கில் இவ்வாறு ரிப்போர்ட் செய்யப்படும் நிலைத்தகவல்கள்/போட்டோ/வீடியோ போன்றவற்றின் நம்பகத்தன்மையை சோதிக்க மூன்றாம் நபர் பரிசோதகர்களுடன் ஒரு ப்ரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது. ஏபிசி நியூஸ், ஆப்பிரிக்கா செக் போன்ற பல நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களிடம் நீங்கள் ரிப்போர்ட் செய்த தகவல் ஒப்படைக்கப்படும். அவர்கள் அதனை பரிசோதித்து அந்த தகவல்கள் சரியா, தவறா, கட்டுக்கதையா, சர்ச்சைக்குரியதா என ஆராய்ந்து ஃபேஸ்புக்குக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

சர்ச்சைக்குரியது என முடிவு செய்யப்பட்டால், பேஸ்புக் கடைபிடிக்கும் ரேங்கிங் அடிப்படையில் அந்த போஸ்ட் அதன் பிறகு நியூஸ் ஃபீடில் முன்னணியில் வராது. இதனால் அந்த போஸ்ட் பேஸ்புக்கில் தான் இருக்கும், ஆனால் பலரைச் சென்றடையாது என்ற நிலைமை ஏற்படும். ஒருவேளை யாராவது அந்த குறிப்பிட்ட போஸ்ட்டை ஷேர் செய்ய வேண்டும் என விரும்பினால், அவருக்கு “இந்த போஸ்ட் மூன்றாவது பார்ட்டியால் சர்ச்சைக்குரியது என குறிப்பிடப்பட்டிருக்கிறது” என அலர்ட் தரப்படும். அதன் பிறகும் அவர் அந்த போஸ்ட்டை ஷேர் செய்ய விரும்பினால் தாராளமாக ஷேர் செய்ய முடியும்.

ஒருமுறை சர்ச்சைக்குரிய போஸ்ட் என அடையாளப்படுத்தப்பட்டு விட்டால், அதன் பிறகு அந்த போஸ்டை பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்து அதிக பேரை ரீச் செய்ய வைக்கவும் முடியாது. ஃபேஸ்புக்குக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற நோக்கில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நிறைய மோசடி செய்தி நிறுவனங்கள் இதுவரை தவறான தகவல்களை பேஸ்புக்கில் தந்து, அதன் மூலம் அவர்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்களை அழைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். இனிமேல் இதுவும் கட்டுப்படுத்தப்படும்.

பேஸ்புக்கில் உங்களுக்கு பகிரப்படும் தகவல்கள் உண்மையானதாக, பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே ஃபேஸ்புக்கின் எண்ணம், அதற்கு இது போன்ற பல மாற்றங்களைச் செய்யப் போகிறோம், அதன் முதல் படி தான் இது. இனிமேலும் அதிரடிகள் தொடரும்” என அறிவித்திருக்கிறது ஃபேஸ்புக்.

– பு.விவேக் ஆனந்த்

Leave a Reply