சிந்து சமவெளி நாகரிக காலத்தில் பேசப்பட்டது தொல் திராவிட மொழி: ஆய்வுக் கட்டுரை தரும் தகவல் – மொழி வரலாறு

சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் தொல் திராவிட மொழியை பேசியிருக்கலாம் என நேச்சர் ஆய்விதழில் வெளியான கட்டுரை குறிப்பிடுகிறது. சில அடிப்படை சொற்களை வைத்துச் செய்த ஆய்வுகளின்படி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே, அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் என்ன மொழியைப் பேசியிருப்பார்கள் என்ற விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அகழாய்வு, மொழி ஆய்வு, மரபணு ஆய்வு, வரலாற்று ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் சிந்துச் சமவெளிப் பகுதியில் பேசிய மொழி எந்த மொழியாக இருக்கலாம் என்ற ஆய்வைச் செய்திருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பஹதா அன்சுமாலி முகோபாத்யாய.
இவர் ஒரு மென்பொறியாளராகப் பணியாற்றிவந்தாலும், இந்தத் துறையின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக, சிந்துச் சமவெளி குறித்த ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார்.

இது தொடர்பாக இவர் எழுதிய Ancestral Dravidian languages in Indus Civilization: ultraconserved Dravidian tooth-word reveals deep linguistic ancestry and supports genetics என்ற ஆய்வுக் கட்டுரை நேச்சர் க்ரூப் ஆய்விதழில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகியுள்ளது.

சிந்து சமவெளி நாகரீகம் சுமார் பத்து லட்சம் சதுர கிலோ மீட்டரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியாவின் வடமேற்குப் பகுதி ஆகியவற்றில் பரவியிருந்த ஒரு நாகரீகம். தாமிரகால நாகரீகத்திலேயே மிகப் பெரிய, பரந்த அளவில் இருந்த நாகரீகம் இது. சிந்துச் சமவெளி நாகரீகமும் அதன் எழுத்துகளும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே, அங்கு என்ன மொழி பேசப்பட்டது என்பதை அறிய ஆய்வாளர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

சிந்துச் சமவெளி நாகரீகம் பரவியிருந்த பகுதிகளில் தற்போது இந்தோ – ஆரிய மொழிகளான பஞ்சாபி, சிந்தி, ஹிந்தி, மார்வாரி, குஜராத்தி, தார்திக், இரானியன், நூரிஸ்தானி, புருஷாஸ்கி உள்ளிட்ட மொழிகள் பேசப்பட்டுவருகின்றன. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியான ப்ராஹுவியும் பேசப்பட்டு வருகிறது.

உலகில் தற்போது பேசப்படும் மொழிகளைவிட ஆதிகாலத்தில் அதிக மொழிகள் பேசப்பட்டன. அதைப்போலவே, சிந்துச் சமவெளி பகுதிகளில் தற்போது பேசப்பட்டதைவிட, ஆதிகாலத்தில் அதிக மொழிகள் பேசப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்த பத்து லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசியிருப்பார்கள் எனச் சொல்ல முடியாது என்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை.

சிந்துச் சமவெளியின் தீராத புதிர்கள்

சிந்துச் சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகள் இன்னும் படிக்கப்படவில்லை. ஆகவே அங்கு என்னென்ன மொழிகளைப் பேசியிருக்கக்கூடும் என்பது குறித்து ஆய்வாளர்களிடம் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தொல் இந்தோ – ஆரிய மொழி, தொல் திராவிட மொழி, தொல் முண்டா மொழி என ஒவ்வொரு ஆய்வாளரும் ஒவ்வொரு கருதுகோள்களை முன்வைக்கின்றனர்.

இதில் காலின் பி மாசிகா போன்ற ஆய்வாளர்கள் திராவிட மொழியையே ஹரப்பர்கள் பேசியிருக்கக்கூடும் என்று வலுவாகக் கருதினாலும் அதனை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அகழாய்வாளர்களும் மொழியியலாளர்களும் ஆய்வுகளையும் விவாதங்களையும் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் மரபணு ஆய்வுகளும் மற்றொரு பக்கம் நடந்துகொண்டிருந்தன.

2019ல் வி.எம். நரசிம்மன் உள்ளிட்டோர் செய்த ஒரு ஆய்வின் முடிவுகளின்படி, சிந்துச் சமவெளியில் வாழ்ந்த மக்களின் தனித்துவமிக்க மரபணு மாதிரி கண்டுபிடிக்கப்பட்டதோடு, தொல் திராவிடர்களின் பரவல் குறித்தும் சில தகவல்களை அளித்தன.

அதாவது, பெரும்பான்மை சிந்துச் சமவெளி மக்களிடம் தொல் இரானிய விவசாயிகளின் மரபணுக்களும் பழங்கால தென்னிந்திய மூதாதைகளின் மரபணுக்களும் இருந்ததாக இந்த ஆய்வு கூறியது. சிந்து சமவெளி நாகரீகம் வீழ்ந்தபோது, ஸ்டெப்பி புல்வெளிகளில் இருந்து வந்திருந்த தொல் வட இந்தியர்களுடனும் தொல் தென்னிந்தியர்களுடனும் கலந்தனர். இந்த இரு பிரிவினரின் வழித்தோன்றல்களே தற்போது தெற்காசியாவில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

ஆனால், இந்த ஆய்வுகளை வைத்து சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் பெரும்பான்மையாக என்ன மொழிகளைப் பேசினார்கள் என்பதைக் கண்டறிய முடியவில்லை. அங்கு வாழ்ந்த மக்களின் மூதாதையர்களும் அதற்குப் பின்வந்தவர்களும் என்ன மொழியைப் பேசினார்கள் என்பதைக் கண்டறிய முடியவில்லை. மேலும், திராவிட மொழிகள் இங்கிருந்து தென்னிந்தியாவுக்குச் சென்றதா அல்லது தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்ததா என்பதையும் சொல்ல முடியவில்லை.

ஆகவே, சில சொற்களை எடுத்துக் கொண்டு, அவற்றை ஆய்வுசெய்து சிந்து சமவெளியில் பேசியிருந்திருக்கக்கூடிய மொழி எது என்பதை அறியலாமா என ஆராய முடிவுசெய்தார் பஹதா அன்சுமாலி முகோபாத்யாய. அப்படி ஆய்வுக்காக தேர்வுசெய்யப்படும் சொற்கள் பின்வரும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென பஹதா கருதினார்.

அதாவது,

1. அந்த மூதாதை சொல் வரலாற்று ரீதியிலும் மொழியியல் ரீதியிலும் சிந்துச் சமவெளி பகுதியில் உருவாகியிருக்க வேண்டும்.

2. அந்த தொன்மையான சொல் சுட்டிக்காட்டும் பொருள், சிந்து சமவெளி நாகரீகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

3. அந்த தொன்மையான சொல் மொழியியல் ரீதியாக ஆய்வுசெய்தால், தற்போது இந்தியத் துணைக் கண்டத்தில் பேசப்படும் மொழிக் குடும்பத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

4. அந்த மொழிக் குடும்பம் சிந்து சமவெளி நாகரீக காலத்திலும் இருந்திருக்க வேண்டும்.

5. அந்த மொழியைத் தற்போது பேசுபவர்களுக்கும் சிந்து சமவெளியில் வாழ்ந்திருக்கக் கூடியவர்களுக்கும் மரபணு தொடர்பு இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு சொல்லைக் கண்டுபிடிப்பது எப்படி?

Related Post

சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் பாரசீக வளைகுடாவுடனும் மெசபடோமியாவுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். குறிப்பாக யானைத் தந்தங்கள் சிந்து சமவெளியிலிருந்துதான் மெசபடோமியாவுக்கு ஏற்றுமதியாயின. அவற்றில் பல சிந்து சமவெளியின் மெலுஹாவிலிருந்து நேரடியாகவும் சில பாரசீக வளைகுடாப் பகுதி வழியாகவும் மெசபடோமியாவுக்கு ஏற்றுமதியாயின.

இந்த யானைத் தந்தங்களுடன், தந்தங்களைக் குறிப்பதற்கான சொற்களும் பாரசீக மொழிக்கும் மெசபடோமியப் பகுதிகளில் வழங்கப்பட்ட மொழிகளுக்கும் ஏற்றுமதியாயின. ஆகவே, இந்த நாடுகளைச் சேர்ந்த அக்கேடியன், எலமைட், ஹுர்ரியன், பழங்கால பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் மற்றும் எழுத்துகளில் சிந்து சமவெளியிலிருந்து வந்திருக்கக்கூடிய சொற்கள், குறிப்பாக யானைகள், தந்தங்களைக் குறிக்கக்கூடிய சொற்கள் கிடைக்குமா என ஆய்வுசெய்தார் பஹதா.

உள்ளூரில் தயாரிக்கப்படாத, கிடைக்காத ஒரு பொருளை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது, அந்தப் பொருளை எந்த வெளிநாட்டிலிருந்து வாங்குகிறோமோ அங்கு வழங்கப்படும் சொல்லாலேயே அழைக்கிறோம். இந்த அடிப்படையை மனதில் கொண்டு தேடியபோது அவருக்கு ‘பிரு/பிரி’ என்ற சொல்லும் அவற்றின் வேறுவிதமான உச்சரிப்புகளும் கிடைத்ததன. இந்த ‘பிரு’ என்ற சொல்லுக்கு அக்கேடிய மொழியில் ‘யானை’ என்றும் பழங்கால பாரசீக மொழியில் ‘தந்தம்’ என்றும் பொருள் இருந்தது.

பழங்கால எகிப்திலும் தந்தங்களைக் குறிக்கும் சொற்கள் இருந்தன என்றாலும் ‘அப்’, ‘அபு’ போன்ற ஒலிக் குறிப்புகளாக இருந்தன. ஆகவே, மெசபடோமியாவில் புழங்கிய ‘பிரு/பிரி’ என்ற சொல் சிந்துச் சமவெளியில் இருந்தே வந்திருக்க வேண்டுமென முடிவுசெய்தார் பஹதா.

பல திராவிட மொழிகளில், ‘பிலு’, ‘பெல்லா’, ‘பல்லா’, ‘பல்லவா’, ‘பல்’ என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் பல யானைகளையும் குறித்தன. ஆனால், ‘பிலு’ என்பது எப்படி அக்கேடிய மொழியில் ‘பிரு’ என்றானது என்பதற்கும் விடை தேடியிருக்கிறார் பஹதா. அதாவது, பழங்கால பாரசீக மொழியில் ‘ல’ என்ற உச்சரிப்பு இல்லை. அதற்குப் பதிலாக ‘ர’ என்ற உச்சரிப்பே பயன்படுத்தப்படுகிறது.

யானையின் தந்தம் என்பது அதன் பல் என்பதால், தந்தத்தைக் குறிக்கும் “பல்”, “பல்லு”, “பில்லு” என்ற சொற்கள், ‘பிரு/பரி என மாறியிருக்கின்றன. அதேபோல, Salvadora persica என்ற மரத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார் பஹதா. அரபியிலும் வட இந்தியாவிலும் ‘மிஸ்வாக்’ என இந்த மரம் குறிப்பிடப்படுகிறது. இந்த மரத்தின் பாகங்கள் பற்களுக்கு நன்மை செய்யக்கூடியவை என நம்பப்படுகிறது. தற்போதும் பற்பசைகள்கூட இந்தப் பெயரில் வெளியாகின்றன.

சிந்துச் சமவெளி காலகட்டத்தில் இந்த ‘மிஸ்வாக்’ மரமும் ‘பிலு மரம்’ என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் சிந்துச் சமவெளி பிரதேசத்தில் பல்துலக்க இந்த மரத்தின் குச்சிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருக்க்ககூடும் எனக் கருதுகிறார் பஹதா. தற்போதும் பாகிஸ்தான், ராஜஸ்தான், ஹரியானா போன்ற சிந்துச் சமவெளிப் பிரதேசங்களில் இந்த மரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.

ஆகவே, தந்தம், யானை, பற்களுக்குப் பயன்படக்கூடிய மிஸ்வாக் மரம் ஆகியவை எல்லாமே ‘பல்’ என்பதைக் குறிக்கக்கூடிய சொல்லில் இருந்தே உருவாகியிருக்கின்றன. இந்த ‘பல்’ என்ற வேர்ச்சொல், திராவிட மொழிகளில் அனைத்திலும் பொதுவானதாக இருந்தது. ‘பிளிரு’ என தெலுங்கிலும் ‘பல்ல’, ‘பிலு’ என கன்னடத்திலும் யானையைக் குறிக்கும் சொற்கள் இருக்கின்றன.

சென்னைப் பல்கலைக்கழகம் 1924ல் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி ‘பிள்ளுவம்’ என்ற சொல் யானையைக் குறிப்பதாகச் சொல்கிறது. ஆகவே, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் ‘யானை’, ‘ஏனுக’, ‘ஆன’ போன்ற சொற்களால் யானைகள் குறிப்பிடப்பட்டாலும், பல்லை அடிப்படையாக வைத்த சொற்களும் யானையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பல் என்ற சொல்லில் இருந்து ‘பல்லு’, ‘பல்லவா’ போன்ற சொற்கள் உருவாகியிருக்க முடியும். ஆனால், ‘பல்’ என்ற சொல்லில் இருந்து ‘பிள்/பில்”, ‘பிள்ளுவம்’ போன்ற சொற்கள் எப்படி உருவாகியிருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு ஃப்ராங்க்ளின் சவுத்வொர்த்தின் Linguistic Archaeology of South Asia புத்தகம் விடையளிக்கிறது. அதாவது, ‘பல்’ என்பதைக் குறிப்பதற்கான வேர்ச்சொல் ‘பிள்’ என்பதாகக்கூட இருக்கலாம் என்கிறார் இவர்.

மேலே சொன்ன அடிப்படைகளை வைத்துத்தான் சிந்துச் சமவெளிப் பிரதேசங்களில் தொல் திராவிட மொழிகள் பேசப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறார் பஹதா. ஆனாலும், அந்த மொழியைத் தவிர பிற மொழிகளும் பேசப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புகளையும் அவர் மறுக்கவில்லை.

தொல் திராவிட மொழியைத் தமிழ் என்று சொல்ல முடியுமா?

ஆனால், ஒரு சில சொற்களை வைத்துக்கொண்டு மட்டும் சிந்துச் சமவெளி மக்கள் தொல் திராவிட மொழியைப் பேசியிருப்பார்கள் என்ற முடிவுக்கு வர முடியுமா? தன்னுடைய ஆய்வு குறித்து பிபிசியிடம் விரிவாகப் பேசிய பஹதா, “இம்மாதிரியான ஆய்வுக்கு எல்லா சொற்களையும் எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு மொழியில் பெரும்பாலான பெயர்ச் சொற்கள் வெவ்வேறு மொழியிலிருந்து வந்திருக்கும். தொல்லியல், மொழியியல், வரலாற்றியல், விலங்கியல், தாவரவியல் ரீதியாக ஒவ்வொரு மொழிக்கும் உரித்தான சில அடிப்படைச் சொற்கள் உண்டு. “பல்” என்பது அப்படியான அடிப்படைச் சொற்களில் ஒன்று என்பதை உலகம் முழுவதும் மொழியியலாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு மொழியின் மூலத்தைக் கண்டறிவது போன்ற ஆய்வுகளுக்கு இது மாதிரியான அடிப்படைச் சொற்களே ஆதாரமாக அமைகின்றன. தந்தம், பல்துலக்கும் குச்சி ஆகியவற்றுக்கு ஹரப்பாவில் இந்த சொல்லில் இருந்து பிறந்த சொற்களே பயன்படுத்தப்பட்டிருப்பதால், சிந்து சமவெளியில் இருந்தவர்கள் தொல் திராவிட மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.

சிந்து சமவெளியில் பேசிய மொழியை ஏன் தொல் திராவிட மொழி எனக் குறிப்பிட வேண்டும்; திராவிட மொழிகளிலேயே பழைய மொழியான தமிழ் என்று அதனைக் குறிப்பிட முடியாதா என பஹதாவிடம் கேட்டபோது, “சிந்துச் சமவெளிப் பகுதியில் பேசியிருக்கக்கூடிய ஒரு மொழியை ‘தொல் திராவிட மொழி’ என்று குறிப்பிடுகிறோம். தற்போது பேசப்படும் திராவிட மொழிகளில் உள்ள பல தொன்மையான சொற்கள் அந்த மொழியில் இருக்கும். ஆனால், அந்த மொழி, தற்போது பேசப்படும் எந்த ஒரு மொழியாகவும் இருந்திருக்காது. ஆகவேதான் அதனை தொல் திராவிட மொழி என்கிறோம்” என்று விளக்கினார்.

சிந்து வெளியில் கிடைத்த எழுத்துகள் சொல்வதென்ன?

சிந்துச் சமவெளியில் கிடைத்த எழுத்துகள் இன்னமும் புரிந்துகொள்ளப்படவில்லை. ஆனால், தன்னுடைய ஆய்வில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகச் சொல்கிறார் பஹதா. “சிந்துச் சமவெளியில் கிடைத்த எழுத்துகள் ஒலிக் குறிப்புகள் அல்ல. பெரும்பாலான ஆய்வாளர்கள் அவற்றை எழுத்துகளாகக் கருதியே ஆய்வு செய்கிறார்கள். அதில் முடிவே கிடைக்காது. காரணம், சிந்துவெளியில் கிடைத்தவை சித்திர எழுத்துகள். ஒவ்வொரு எழுத்தும் ஒரு சொல்லைக் குறிப்பவை. சிந்து சமவெளியின் வரலாற்றுப் பின்னணி, பண்பாட்டுப் பின்னணியிலிருந்து இவற்றின் பெரும்பாலான எழுத்துகளைப் புரிந்துகொள்ள முடியும்” என்கிறார் பஹதா அன்சுமாலி முகோபாத்யாய.

சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகளை ஆய்வுசெய்து இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை தற்போது சக ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுவருகிறது. விரைவில் அந்தக் கட்டுரை பதிப்பிக்கப்படும் என்கிறார் பஹதா. அவரைப் பொறுத்தவரை, சிந்துச் சமவெளியில் கிடைத்த எழுத்துகள், முத்திரைகள் போன்றவை. வரி, வர்த்தகக் கட்டுப்பாடு, வர்த்தக உரிமம், கிட்டங்கியை மேலாண்மை செய்வது, வானிலை குறித்த தகவல்களையே அவை சொல்வதாகத் தெரிவிக்கிறார்.

source: bbc.com/tamil

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago