சென்னை: வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தென் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மினிகாய் தீவுக்கு தென்கிழக்கே 130 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக மத்திய கிழக்கு அரபிக் கடலில் வலுவிழக்கும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது. பாபநாசத்தில் 19 சென்டி மீட்டர் மழையும் செங்கோட்டையில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு திசையை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக நகரும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

மேலும் மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் பலத்த காற்று வீசும் என்பதாலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதாலும் குமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

source: oneindia.com

Leave a Reply