லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் தராததால் இறந்த மனைவியின் உடலை கணவர் தள்ளுவண்டியில் எடுத்து சென்ற சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல் உயிரிழந்தவர்களின் சடலங்களை கையில் சுமந்தபடியே பல கிலோ மீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்வதும், இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்வதும் வாடிக்கையாகி வருகிறது.

மருத்துவமனைகளிலும் ஸ்ட்ரெட்சர் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் நோயாளிகள் இழுத்து செல்லப்படுவதும் தரையில் படுக்க வைப்பதும் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்காததால் இறந்த மனைவியின் உடலை தள்ளு வண்டியில் வைத்து கூலி தொழிலாளி ஒருவர் 5 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

மைன்புரி மாவட்டம் ஹரிகாபூர் கிராமத்தைச் சேர்ந்த கன்ஹாயாலால் என்பவரின் மனைவி சோனி. இவருக்கு நேற்று காலை திடீரென்று கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மைன்புரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சோனி கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோனி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை ஊருக்கு கொண்டு செல்ல கன்ஹாயாலால் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததாக தெரிகிறது. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கன்ஹாயாலால் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு சோனியின் சடலத்தை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டே சென்றார். கொளுத்தும் வெயிலில் வயதான தாயாரையும் அமர வைத்து அவர் தள்ளிச் சென்ற காட்சிகள் காண்போர் நெஞ்சங்களை பதைபதைக்க வைத்தது.

ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்து உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கிடைக்காமல் மரணிக்கும் உறவுகளை தோளில் சுமந்து செல்வது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

source: oneindia.com

Leave a Reply