சென்னை: தமிழிசை இணையதளத்தில் இருந்து தொடர்பு கொண்டதாலேயே அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டார் என மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

கிடைக்கும் மின்னஞ்சல் முகவரிகளை கொண்டு உறுப்பினராக்கி கொள்வதா என்றும் சாடினார் தமிழிசை. இதற்கான ஆதாரத்தையும் அவர் காண்பித்தார்.

தன்னை கேட்காமல் மக்கள் நீதி மய்யம் தன்னை கட்சி உறுப்பினராக்கியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில் தமிழிசை குற்றச்சாட்டுக்கு மக்கள் நீதி மய்யம் தனது டிவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளது. அதாவது, தமிழிசை தனது இணையதளத்தில் இருந்து தொடர்பு கொண்டதாலேயே அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம், உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம் என்றும் உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்திற்கு அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: oneindia.com

Leave a Reply