சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.90.5 லட்சம் மதிப்புள்ள சுமார் 3 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் விமானம் மீண்டும் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து தில்லி புறப்படத் தயாரானது. பணியாளர்கள் விமானத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் ஒரு சிறிய பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதில் 1.7 கிலோ எடையில் ரூ.52.5 லட்சம் மதிப்பிலான சுத்தத் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதேபோல், அந்த விமானத்தின் சீட்டின் அடியில் மற்றொரு சிறிய பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பார்சலைக் கைப்பற்றினர். அதில் 1.25 கிலோ எடையில் ரூ.38 லட்சம் மதிப்பிலான தங்கம் இருந்தது. மொத்தம் சுமார் 3 கிலோ எடையில் ரூ.90.5 லட்சம் மதிப்பில் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply