கொழும்பு: ”அணியில் ‘சீனியர்’ பவுலர்கள் இல்லாத நிலையில், கிடைக்கும் வாய்ப்புகளை சவால்களாக எடுத்துக் கொண்டு, சாதிக்கத் தயார்,” என, ஷர்துல் தாகூர் தெரிவித்தார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. புவனேஷ்வர் குமார், பும்ரா என, முன்னணி ‘வேகங்கள்’ ஓய்வில் உள்ள நிலையில், புதிய வரவு ஷர்துல் தாகூர், வேகப்பந்து வீச்சில் நம்பிக்கை தந்து வருகிறார். முதல் மூன்று போட்டியில், 5 விக்கெட் சாய்த்தார். இலங்கைக்கு எதிராக, 4 விக்கெட் சாய்த்து, ஆட்ட நாயகன் ஆனார்.

மும்பையை சேர்ந்த இவர், வரும் ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடவுள்ளார்.
பவுலிங் திறமை குறித்து இவர் கூறியது:

பொதுவாக சவால்களை சந்திப்பது எனக்கு அதிகம் பிடிக்கும். பெரும்பாலும் அணியில் சீனியர் பவுலர்கள் இல்லை என்றால், எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படுவேன். ரஞ்சி கோப்பை தொடரில், மும்பை அணியில் ஜாகிர் கான், அகார்கர், குல்கர்னி என, ‘சீனியர்கள்’ இடம் பெற முடியாத நேரங்களில், வாய்ப்பு எனக்கு தேடி வரும். இதில் நன்கு செயல்பட்டுள்ளேன்.

இதைத் தான் தற்போது இந்திய அணியில் செய்கிறேன். தற்போது புவேனேஷ்வர் போல, நானும் பந்தை கைவிரல்களால் நன்றாக அழுத்தி பிடித்து, பவுலிங் செய்யும் முறையை (‘நக்கிள் பால்’) கற்றுள்ளேன். மும்பை அணியில் ஜாகிர் கான் இதுபோலத் தான் பவுலிங் செய்வார் என்றாலும், இவரது வீடியோக்கள் அதிகம் பார்த்தது இல்லை.

இதை நானாகத் தான் கற்றுக் கொண்டேன். இது அவ்வளவு எளிதாக வந்து விடவில்லை. உள்ளூர் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், கடந்த இரண்டு ஆண்டுகளாக, முயற்சி செய்து வந்தேன். தற்போது ஓரளவுக்கு தேறியதாக நினைக்கிறேன்.

இவ்வாறு ஷர்துல் தாகூர் கூறினார்.

Leave a Reply