சென்னை : பிரதமர் நரேந்திர மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மெகா கூட்டணிக்கு ஆதரவு கோரினேன். ஜனநாயகம் மிகப் பெரும் ஆபத்தில் உள்ளது. நாட்டு மக்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர். பாஜகவிற்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது.

சிபிஐ, ரிசர்வ் வங்கி விவகாரத்தில் கூட பாஜக ஆட்சி தலையிடுகிறது. தன்னாட்சி அமைப்புகளில் மத்திய அரசின் தலையீடு எப்போதுமே இருந்ததில்லை. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க பயன்படுத்தப்படுகிறது.

[மெகா கூட்டணியில் இணைகிறது திமுக.. நாயுடு சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் அறிவிப்பு ]

பொருளாதாரம் மோசமாக உள்ளது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு மோசமான நிலை ஏற்பட்டதில்லை . பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட 2 ஆண்டுகளில் எந்த பலனையும் தரவில்லை. இப்போது நிதித்துறை அமைச்சர் கூறுகிறார் கருப்புப்பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வரியை வசூலிக்க மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிறார். கருப்புப்பணம் அனைத்தும் இப்போது வெள்ளைப்பணமாக மாற்றப்பட்டு விட்டது யாருக்கு இது பயனை தந்திருக்கிறது.

வங்கிகளும் கூட மோடி அரசு மீது நம்பிக்கையிழந்து வருகின்றனர். நாட்டில் நிலையற்ற தன்மை இருக்கிறது, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் அதற்காகத் தான் ஸ்டாலினை சந்தித்துள்ளேன்.

ராகுல் காந்தி, மமதா பானர்ஜியுடன் மீண்டும் சந்திக்கவுள்ளேன். அனைவருமே ஒன்றிணைந்து பணியாற்ற விரும்புகின்றனர், நாட்டை காப்பாற்ற விரும்புகிறார்கள். நேற்று கர்நாடகாவில் தேவகவுடா, குமாரசாமியை சந்தித்தேன். மறைந்த தலைவர் கருணாநிதியுடன் எனக்கு நீண்ட கால பழக்கம் இருந்தது.

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் நான் ஒருங்கிணைக்கிறேன், இதன் அடுத்த கட்டம் என்ன என்பதை அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.

காங்கிரஸ் கட்சியுடன் 40 ஆண்டுகாலமாக எங்களுக்கு வேறுபட்ட கருத்து இருக்கிறது எனினும் வேறுபாடுகளை மறந்து நாட்டை காப்பாற்றுவது முக்கியம் ஜனநாயம் முக்கியம் என்று தான் நாங்கள் ஒன்றுபட விரும்புகிறோம்.

தமிழகத்திற்கு பாஜக எதுவுமே செய்யவில்லை. எங்கள் அணியில் இருக்கும் அனைவருமே உறுதியான தலைவர்கள். பிரதமர் மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர். தமிழகத்தில் அரசே இல்லை என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Leave a Reply