இரண்டாக மடித்து வைத்துக் கொள்ளக் கூடிய ஸ்மார்ட்போனை சாம்சங் தயாரிக்க உள்ளதாகவும், வெளியிட்டுவிட்டதாகவும் அவ்வபோது செய்திகளும், புரளிகளும் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், முதல்முறையாக அதுபோன்ற ஸ்மார்ட்போனை தயாரித்து வருவதாக சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உலகுக்கு அறிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த மாநாட்டில், Foldable smartphone என்று சொல்லக் கூடிய, மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போனின், முன்மாதிரியை விடியோ வடிவில் சாம்சங் நிறுவனம் வெளியிட்டது. எனினும், அசலைப் போன்று மற்றவர்கள் போலியை தயாரித்து விடுவதைத் தவிர்க்கும் வகையில், அந்த ஸ்மார்ட்போனின் முழுமையான வடிவமைப்பை சாம்சங் நிறுவனம் வெளியிடவில்லை.

Foldable smartphone மொத்தத்தில் 7.3 இன்ச் திரையுடன் சிறிய புத்தக அளவில் இருக்கும். அதை மடித்து வைத்திருக்கும்போது 4.6 இன்ச் திரை கொண்டதாக மாறிவிடும். அதிலும் வாடிக்கையாளர்கள் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போன் உலகில் வியப்பூட்டும் புதிய கண்டிப்பாகக் கருதப்படும் இந்த ஸ்மார்ட்போனை தயாரிக்கும் பணியில் சாம்சங் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

newstm.in

Leave a Reply